பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

கவிதையும் வாழ்க்கையும்


கண்ட பல கருத்துக்களும் சமயக் கவிதைகளைச் சேர்ந்தனவேயாம். இவ்வாறு எல்லாவற்றையும் சமயத்தின்மேல் ஏற்றிக்கண்ட காரணத்தால், தமிழ்க்கவிதை உலகில் இன்று சமயப் பாடலே அதிக இடத்தைப் பெற்றுள்ளது.

உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் சமயம் பற்றிய கவிதைகள் தமிழ் நாட்டிலேதான் அதிகம் உண்டு. சமயம் மக்கள் வாழ்வோடு பிணைந்துவிட்டது. இந்த உண்மையை உணர்ந்த நிலையில் சமயத் தலைவர்கள் தங்கள் கவிதைகளை வாழ்வோடு பிணைத்தே காட்டினர்கள். நாட்டில் சமய வெறியும் காழ்ப்பும் உண்டான காலத்திலே மற்றச் சமயங்களைப் பழித்துப் பாடியும் தம் சமயத்தைப் பாராட்டிப் போற்றியும் வீண் தொல்லையை நாட்டில் வளர்த்து வந்தனர் சிலர். ஆயினும், அது போன்றே விரோத மனப்பான்மையை வளர்க்கும் பாடல்கள் கால வெள்ளத்தில் அழிந்து கேட்பாரற்றுக் கிடக்க, சமயத்தை வாழ்வொடு பிணைத்த பாடல்கள் அனைத்தும் கால வெள்ளத்தை எதிர்த்து வாழ்கின்றன. எனினும், நாகரிகம் சிறந்ததெனக் கூறிக் கொள்ளும் இந்த இருபதாம் நூற்றாண்டிற்கூட, சமயம் குறுகிய மனப்பான்மையாளரின் கைப்பாவையாய் இருக்கின்ற காரணத்தால் ஒரு சமய நூல்களை மற்றவர்கள் படிப்பது தவறு என்ற மனப்பான்மையால்-பிற சமயங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் அறிய முடியாது, பொருள் பொதிந்த கவிதைகளை அனுபவிக்க முடியாது, மக்கள் வாளாகழிகின்றார்கள். பிற்காலத்தில் வந்த தாயுமானர் போன்ற சமயத் தலைவர்கள் இந்த வாழ்க்கை உண்மைகளை யெல்லாம் நன்கு வெளியிட்டிருக்கின்றார்கள்.

சங்ககாலத்தே கவிதை வாழ்க்கையைப் பற்றி நின்றது. அதில் சமயக் கருத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றும் இடம் பெற்றிருந்தன. பத்தாம் நூற்றாண்டுவரை சமய இலக்கியம் நாட்டில் வளர்ந்தது. அக் கவிதைகள் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. அவற்றுள் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றும் இடம் பெற்றுச்