பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

கவிதையும் வாழ்க்கையும்


கற்பழிக்கப்பட்டார்கள்! அவர்களையெல்லாம் 'தள்ளிவிடுவதா, அன்றிக் கொள்வதா!' என்று எத்தனை கணவன்மார் அல்லல் உற்றனர், ஆனால், அந்த வேளையில் அண்ணல் காந்தியடிகள் அங்கே சென்று நின்று, 'இளம்பெண்கள்-கற்பழிக்கப்பட்ட பெண்கள். மனமறிய அவ்வாறு குற்றம் செய்யவில்லை. அவர்களை அவர்கள் கணவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.' என்று அவரவர் கணவரிடம் உரியவரைச் சேர்த்து வைத்தார். இந்தச் செய்தியை நாளிதழில் படிக்கும் காலத்து நாம் நம்மை மறந்தோம்! இத்துணைச் செம்மை நெறியில் வாழ வழி காட்டிய அண்ணல் காந்தியை வாயாரப் போற்றினோம். இந்த உண்மையைக் கம்பர் அன்றே நமக்குக் காட்டிச் சென்றிருக்கின்றர். வால்மீகியினும் கம்பர் அங்கு வேறு பட்டுவிட்டார். இராமன் அடி தீண்டக் கல் பெண்ணாயிற்றோ இல்லையோ, அதுபற்றி நமக்குக் கவலையில்லை. அப்பெண்ணைக் கொண்டு கம்பர் நமக்குக் காட்டும் உண்மைதான் நமக்குத் தேவை. அப் பெண்ணுருவம் பெற்ற அகலிகையை அவள் கணவனோடு சேர்ப்பித்து இராமன் விஸ்வாமித்திரருடன் மேலே சென்றுவிட்டான் என்ற அளவோடு வால்மீகி இராமாயணம் செல்கிறது. ஆனால், கம்பர் அந்த அளவோடு விட்டிருப்பின், அவர் இராமாயணம் தமிழ்நாட்டில் வாழ்ந்திராது. இன்று காந்தி அடிகள் காட்டிய வழியைத்தான் அன்று கம்பர் காட்டினார். பெண்ணுருவாகிய அகலிகையைக் கெளதமரிடம் அழைத்துச் சென்றான் இராமன். பின்பு, 'நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக!' என்று ஆணையும் இடுகின்றான். அகலிகை மனமறியப் பிழைகள் செய்யவில்லை என்றும், அவளை ஏற்றுக் கொள்ளுவதே கணவன் கடன் என்றும் திட்டமாகக் கூறி இராமன் வழிக் கம்பர், கணவன் அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கின்றார். இக் கருத்தை வாழ்வொடு பொருத்தி அதற்கு வழிகாட்டிய அண்ணல் காந்தியைப் போற்றும் நாம், அதே நெறியில் வழுக்கி வீழ்ந்தவரை வாழ வைக்கக் கம்பர் கடைப்பிடித்த அந்த நெறியைப் போற்ற திருத்தல் நியாயமோ?