பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

385


இவ்வாறே கம்பராமாயணத்தில் எத்தனையோ பகுதிகள் வாழ்வோடு இணைந்து கிடக்கின்றன. அரசன் ஆளவேண்டிய நெறியும், குடிகள் அரசன் ஆகியோர் இணைந்து நின்று நாட்டில் அமைதி வளர்க்க வேண்டிய் வழியும், சமுதாயச் சீரமைப்பு முறைகளும், பிறவும் பலப்பல வகையில் பாராட்டிப் பேசப்படு கின்றன. உள நூற் புலவனை ஒத்துக் கம்பர் ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளத்தன்மையையும் விளக்கிக்காட்டி, உள்ள நிகழ்ச்சியையும், அதன்வழி வாழ்வில் தோன்றும் நெறித் துறைகளையும், பண்பாடுகளையும், பிறவற்றையும் எடுத்துக் காட்டும் திறன் அறிந்து மகிழ வேண்டிய ஒன்றாகும், இக் கம்பரின் கவிதைகளைப் பற்றி நாள்தோறும் பலப்பல புதிய நூல்கள் வெளிவந்து கொண்டே யிருக்கின்றமையின் அவற்றைப்பற்றி ஒன்றும் நான் இங்கு அதிகமாகக் கூற வேண்டுவதில்லை. இத்துணை வாழ்க்கைத் தத்துவங்களையும் உள்ளடக்கிய கவிதைகளாகக் கம்பர் தன் பாடல்கள் அமைந்துள்ளமையினாலேதான் அவை கெடாது வாழ்கின்றன என்ற ஒன்றை மட்டும் கூறி, அதுபோன்று வாழும் மற்றோரு காப்பியத்தைக் காணலாம்.

சேக்கிழார் கம்பரைப் போலத் தம் காவியத்தைப் பிறமொழியிலிருந்து மொழி பெயர்த்து எழுதாவிட்டாலும், அவருக்கும் முதல் நூல் இல்லாமல் இல்லை. சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையும், அதையொட்டி நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும் அவர்தம் பெரிய புராணத்துக்கு முதல் நூல்களாய் அமைந்தன. ஆனால், கம்பர் வடமொழிக் காப்பியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். சேக்கிழாரோ, தமிழ் நாட்டிலேயே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தம் காவியத்தில் தீட்டியிருக்கிறார். இதில் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள் கூறப்படுகின்றன. கதைகள் அத்தனையும் நடந்தனவா அன்றி அனைத்தும் கட்டுக்கதையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டா. சேக்கிழார் நாயன்மார்களின் வரலாறுகளை அமைத்துப் போகும் கவிதைப் போக்குத்தான் நமக்குத் தேவை. ஒவ்வொரு அடியவரைப் பற்றியும் கூறும் போது அவர்தம் உள்ள நெகிழ்ச்சிகளைப் பற்றி அவர் காட்டும்