பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

8. பிற்கால இலக்கியங்கள்


‘வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
சயங்கொண்டான்: விருத்தமென்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாவு கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காளமேகம்.’

என்று, ஒவ்வொரு புலவனுக்கும் இலக்கியத்தைப் பிரித்துத் தரும் வகையில் பிற்காலத்தில் இலக்கியங்கள் எனப்படும் கவிதைத் தொகுதிகள் பலப்பலவாகப் பல்கிப் பெருகிவிட்டன. வசை பாடலையும் ஒருவருக்கு வரையறுத்து, அதன்வழி அவர் புகழும் தேடிக் கொள்ள வகை செய்தார்கள் என்றால், அந்தக் காலத்தை என்னென்பது! ‘மனத்தானும் மாணா செய்யாமை தலை,’ என்ற அறம் வகுத்த வள்ளுவர் பிறந்த நாட்டிலே, வசை பாடி இசைபெறும் புலவரும் வாழ்ந்தனர் என்றால், அதைக் காலத்தின் கோளாறு என்று கூறுவது தவிர, வேறு என்ன முடியும்?

தமிழ் நாட்டில் 14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சிறு பிரபந்தங்கள் என்ற ஒரு வகை இலக்கியங்கள் பல்கிப் பெருகலாயின. அதற்குமுன் அவை இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன எனலாம். கடவுளைப் போற்றுவதிலிருந்து சாதாரண தனிமனிதனைப் புகழும் வரையில் எத்தனையோ வகை வகையான பாடற்றொகுதிகள் நாட்டில் வளரலாயின. அவற்றிற்க்குப் பிறப்பிடம் எங்கே என்று திட்டமாகக் கூற முடியாவிடினும், ஒரு சிலர் வடமொழிக் காவியங்களின் வழிதான் அவை வளர்ந்தன என்கின்றனர். ஆராய்ந்து