பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

39


‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது நல்ல பாடலுக்கு—கவிதைக்குப் பொருந்துவதன்று. அதைப் போன்றதே மற்றொன்றின் கருத்தும்; ஆனால், சற்று விரிந்து செல்வது. ஒன்றைப் பற்றி ஆய்ந்து ஆய்ந்து உண்மை காண முயலுகின்றான் ஒருவன். ஆராயும் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு புது உண்மை புலப்படுகின்றது. ஆனால், அந்த அளவோடும் அது நின்றுவிடவில்லை. அவன் ஒன்றைக்கூட அறிந்தாலும், அவன் அறியாது விட்டது முன்னையிலும் இப்போது அதிகமாக அவனுக்குத் தெரிகின்றது. எனவே அவன் அப்பொருளைப் பற்றி அதிகமாக அறிய அறிய, அது பற்றிய அறியாத பகுதி மேலும் மேலும் பெருகிக்கொண்டே போகின்றது. வள்ளுவர் இந்த இரண்டு உவமைகளையும் நன்கு தேவையான இடங்களில் அமைத்துள்ளார். நாம் அதை விடுத்துக் கவிதையின்வழிக் கருத்தைச் செலுத்துவோம். ஆம். கவிதை என்பது பயில்தொறும் புத்தம்புதிய கருத்துக்களைப் பயில்வார்க்கு உண்டாக்கிக் கொண்டிருக்கவேண்டும். அதனுடன் அக்கவிதை பற்றி அதிகமாக அறிய அறிய, அது பற்றி அறிய வேண்டுவன இன்னும் அதிகமாகிக்கொண்டே செல்ல வேண்டும். இப்படிச் சென்றால், கவிதையின் முடிந்த பொருளைக் காண்பது எப்போது? கவிதையின் நிலையே அதுதான். கவிதையின் முடிந்த முடிபை ஒருவராலும் அறுதியிட முடியாது என்பதே உண்மைக் கவிக்கு இலக்கண மாகும். ஏன்? பாடும் கவிஞனே அதன் கருத்தை அளந்து ஆழங்காண முயலினும், முட்டாது சென்றுகொண்டே இருக்க வேண்டும். அத்தகைய கவிதைகளைப் பாடுவோர் என்றும் வாழ்பவரேயாவர். அத்தகைய நூல்கள் கவிதைகள்—நம் நாட்டில் உண்டா? ஏன் இல்லை வள்ளுவர் திருக்குறள் ஒன்றே போதுமே! இன்னும் எத்தனையோ பாடல்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

வள்ளுவர் குறள் மிகச் சிறிய அளவிற்று. இரண்டடியும் இல்லை என்னுமாறு ஒன்றே முக்கால் அடியால் ஆக்கப்பட்ட ஒன்று அது. படிக்கவும் அவ்வளவு கரடு முரடானது