பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

கவிதையும் வாழ்க்கையும்


என்று தாம் வஞ்சகரைப் பாடிப்பாடி வாயலுத்து, மெய் யலுத்துக் காலலுத்து வாடி நின்றதைப் பாடித் தீர்க்கின்றார். பாவம்! இந்தப் புலவர் நிலை எங்கே? காவலன் கவரி வீச முரசு கட்டிலில் துஞ்சிய சங்கப்புலவன் நிலை எங்கே! இத்தகைய வர்கள் பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்டார்கள். அவர்களோ, வாழ்வு எல்லா உயிர்க்கும் சமம் என்றும், அந்த வாழ்வு சமரச உணர்வில் வளரவேண்டும் என்றும் கூறி, அந்தக் குறிக்கோளுக்கு எல்லை வகுத்தார்கள். வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாததுதான். பொருளிலார்க்கு இவ் வுலகம் இல்லை. என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ஆனால், அந்தப் பொருளுக்காக மானம் இழக்கவில்லை சங்கப் புலவர்கள். பிற்காலப் புலவர்கள் அனைத்தையும் அப்பொருள் ஒன்றுக் காகவே பணயம் வைத்துத் தோல்வியே கண்டார்கள். கல்லாதவனைப் பாடி அவனுடைய பொல்லாப்பையும் தேடிக் கொண்டதை ஒரு புலவர் அழுதழுது பாடுகின்றார், அவர் ஒரு கல்லாத செல்வனைக்கண்டு,

'சீருலா வியகாம தேனுவே! தாருவே!
சிந்தா மணிக்கு நிகரே;
செப்புவச னத்துஅரிச் சந்த்ரனே!'

என்று புகழ்ந்து பாடினாராம். அவன் உடனே கோபங் கொண்டான் என்று கூறுகின்றார். அவர் கூற்றுக்குப் பதிலாக அவன்,

‘ஆரைநீ மாடுகல் மரம்என் றுரைத்தனை?
அலால் அரிச்சந்திரன்என்றே
அடாதசொற்கூறினை? யார்க்கடிமை யாயினேன்?
யார்கையில் பெண்டு விற்றேன்?
தீருமோ இந்த வசை?'

என்று எதிர்த்துப் பேசிக் கோபித்துக்கொண்டு அனுப்பி விட்டான் என்கின்றார் அவர். இவ்வாறு கல்லாத புல்லரிடம் சென்று சங்ககாலப் புலவர்கள் பாடுவார்களா? கண்டவனைப்