பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




 

9. இக்கால இலக்கியங்கள்



ருபதாம் நூற்றாண்டு, தமிழ்க்கவிதை உலகில் பெருமாறுதல் செய்துவிடவில்லையாயினும், இந்த நாளிலும் கவிதைகள் தோன்றி வளராமலில்லை. 'கவிதை என்னும்போது வெறும் பாட்டுக்களை மட்டும் கொள்ளாது, நாம் முதலில் கண்ட இலக்கணப்படி மக்கள் உள்ளங்களைத் தொட்டு உயர்ச்சி அடையும் அத்தனையையும் சேர்த்துக் கணக்கிட்டால், இந்த நூற்றாண்டிலும் கவிதை வளர்ச்சியுற்றதென்றே சொல்லலாம். நாம் மேலே கவிதை உலகம் உயிர்த்தோற்ற வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவற்றையெல்லாம் நன்கு கண்டோம். அவற்றையெல்லாம் இந்த நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சி மெய்ப்பித்து வருகின்றது. உலகம் இன்று தன்னளவில் மிகச் சுருங்கிய ஒன்றாகி விட்டது. உலக இலக்கியங்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன. தமிழ் நாட்டுக் கவிதைக் குவியல்களுள் சிலவும் அவ்வாறு பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றன. அவற்றுள் தலையாயது திருக்குறள். குறளைப் பற்றி மேலே கண்டோம். அந் நூல் சாதி சமய வேறுபாடற்ற ஒன்று என்பது போலவே, நாடுகளுக்கிடையிலும், பிற மொழியாளர்களுக்கிடையிலுங் கூட, அது யாதொரு வேறுபாடு மற்று வாழ்கின்றது எனலாம். அடுத்துச் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருவாசகம் போன்ற நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அப்படியே பல பிற நாட்டு நூல்கள் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்புக் கலையே ஒரு நல்ல நிலையில் வளரத்தக்க வாய்ப்பு அண்மையில் தோன்றியது எனலாம்,