பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கவிதையும் வாழ்க்கையும்


அன்று. பள்ளியில் பயிலும் சிறிய பிள்ளையும் அதை மனப்பாடஞ் செய்து ஒப்பித்துப் பரிசும் பெற்றுவிடுகின்றான். ஒவ்வொரு குறளுக்கும் எளிமையாகவும் பொருள் விளங்கி விடுகிறது. என்றாலும், அக்குறளை ‘ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகியதெனப்’ பலர் பாராட்டுகின்றனரே, ஏன்? அக்குறள் பற்றி, ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்,’ என்றும், ‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றும், பல பாடல்கள் வழங்கப்படுவது ஏன்? அதுதான் கவிதையின் பண்பாடு. கவிதை என்பது பல அடிகளால், சந்தங்களால், பிறவற்றால் ஆகிய ஒன்று என்று எண்ணுவார், ஏமாற்ற மடைந்தவரே யாவர். கவிதை ஒரு சொல்லிலும் உண்டு; அடியிலும் உண்டு. குறள் ஒன்றேமுக்கால் அடியில் தெள்ளத், தெளிந்த கவிதையாகும். அது கற்பனை கலந்த காட்சிகளையும் இயற்கையையும் விளக்கும். எழுத்தோவியம் என்று சொல்ல முடியாது என்பர் சிலர். எனினும், மக்கள் வழுக்கி விழா வகையில் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளை விளக்கிக்கொண்டே செல்வது குறள் என்பதை அறியாதார். யார்? அத்தகைய பாடல்களைக் கவிதைகளாக்கிச், சாகாது வாழவைத்த பெருமை வள்ளுவர் ஒருவருக்குத்தான் உண்டு.

தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை குறள் போற்றப்படுகின்றது. எல்லாக் காலத்தவரும், எல்லாச் சமயத்தவரும், எல்லா நாட்டவரும், எல்லா இனத்தவரும்—ஏன்?—எல்லாக் கட்சியினருங்கூட-அத்திருக்குறட் கவிதையைப் போற்றிப் பாதுகாக்கின்றார்களே! அது ஏன்? அது கவிதை ஆனமையினலேதான்; கவிதைகளுக்கெல்லாம் கவிதையானமையினலே தான். அந்நூலைப் பயிலப்பயிலப் புதுநலம் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. அந்நூலைக் கற்கக் கற்க, அறிந்த நிலையினும் அறியா நிலை விளக்கமாகின்றது. எல்லாருக்கும் ஏற்ற வகையில் அமைந்த கவிதை ஊற்று அது. சைவரும், வைணவரும், சமணரும், பெளத்தரும், மகமதியரும், கிறிஸ்தவரும் தத்தம் சமயக் கொள்கைகளை அதில்