பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கவிதையும் வாழ்க்கையும்


காட்டும். உண்மைக் கவிஞன் ஒருவனே முன்நிறுத்தி, அவனை அவ்வாறு கவி பாடவேண்டிய காரணம் என்ன என்று கேட்டால், நிச்சயம் அவன் பதில் சொல்லமுடியாது. அவன் தனக்காகப் பாடவில்லை. கவிஞன் மட்டுமன்றிப் பெரும் பாலரான மெய்க்கலைஞர்கள் அவ்வாறுதானே உள்ளார்கள்! விஞ்ஞானக் காட்சியில் தன்னை மறந்து மூழ்கித் திளைத்த ‘நியூட்டன்’ போன்ற பேரறிஞர்களை, அல்லும் பகலும் ஆய்வுக் களத்தில் ஏன் இப்படி அல்லல் உறுகின்றீர்கள்? என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் கூற முடியும்?. ஒரு புன்சிரிப்பை வேண்டுமானல் பதிலுக்கு அவர்கள் புலப்படுத்தலாம். அவ்வளவே! தான் உணவு கொண்டதையும் கொள்ளாததையுங்கூட அறிய முடியாது, ஏதோ ஒர் உணர்ச்சி தன்னைச் செலுத்த, அதன் வழியே தன்னை ஒப்படைத்து, அதனால் ஒரு பேருண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே, அந்த விஞ்ஞானியின் கருத்தும் வாழ்வும் கழிகின்றன. கவிஞன் நிலையும் அத்தகையதே. அவன் ஏன் பாடுகின்றான்? இதற்குப் பதில் சொல்லத் தெரியாது அவனுக்கு. அவனை அறியாமல் ஏதோ ஒர் உள்ளொளி அவனை ஆட்கொள்ளுகிறது. அவன் உணர்வை மலைக்குக் கொண்டு செல்லுகிறது; ஆற்று வெள்ளத்தில் மூழ்க வைக்கிறது; கதிரவன் வெம்மையில் நிற்க வைக்கிறது; வான வெளியில் சிறகொடு பறக்க வைக்கிறது: இப்படி எத்தனை எத்த்னையோ வகைகளில் அந்த உணர்ச்சி கவிஞனை நன்கு ஆட்டிப் படைக்கின்றது. அந்த உணர்ச்சி வழியே அவன் ஈர்த்துச் செல்லப்படும் வேளைகளில் அவன் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்கின்றன. அம் முத்துக்களாகிய சொற்களே கவிதைகளாக உருப்பெறுகின்றன.

கவிஞன் தன்னை மறந்த அந்த உணர்வு நிலையில் பாடுகின்ற பாட்டு, உயர்ந்த ஒரு கலைப் பொக்கிஷமாகத் திகழுவதாகும். அந்தப் பாட்டில் மலேயும் காடும், ஆறும் மடுவும், ஏன்—மற்றச் சாதாரணப் பொருள்களுங்கூட இடம் பெற்றிருக்கும். நாம் முன்னே கண்டபடி நம் கண்ணுக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் அந்தப் பொருள்கள்,கவிஞனது உணர்வு வயப்பட்ட