பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கவிதையும் வாழ்க்கையும்


ஆராய்ந்து, இயல்பறிந்து, செய்யுளின் வேறுபடுத்தாது ஏற்றுக்கொள்ளல் அறிந்தோர் கடன்,’ என்று கூறுகின்ருர் அவர். ஆம். அக் கருத்து எப்படிக் காலந்தோறும் பொருந்தியுள்ளது? எவ்வளவு காலம் மாறினும் காலமும் கருத்தும் பொருந்தச் செய்யுளுக்கு ஒப்ப அமைந்தன யாவற்றையுமே செய்யுளாகக் கொள்ளவேண்டுமென அவர் வரையறுப்பது தெள்ளிதின் புலனாகின்றதன்றோ? இந்தப் புறநடையினால் வண்டிக்காரன் பாட்டுங்கூட இலக்கண வழக்கங் பாட்டாக ஏன் மாறக்கூடாது?

செய்யுளின் உறுப்புக்களாக அவர் மாத்திரை தொடங்கிப் புலப்பலவற்றைக் கூறுகின்றார். அவற்றையெல்லாம் ஈண்டு நாம் ஆராய வேண்டா. ஒன்றுமட்டும் காணல் சால்புடைத்து. மொழி திருத்தம் பெற்று, வரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த இலக்கணங்கள் அமைந்தன. ஆனல், செய்யுள் அல்லது பாட்டு, அதற்கு முன்னமே வழக்கத்தில் இருந்துதானே வாழ்ந்திருக்கும்? எழுத்துப் பெறாத சில் இன்றைய மொழிகளிலேகூடப் பல பாடல்களைக் காண்கிறோம். செம்மைப் படாத—திருந்தாத—மொழிகளிலும் பல பாடல்கள் உண்டே! அவைகளெல்லாம் தொல்காப்பியனர் இலக்கண வரம்புக்கு அப்பாற் பட்டனவா என்ற ஐயம் தோன்றுதல் இயல்பே. எனினும், இலக்கியத்தினின்று எடுபடுவது இலக்கணம்' என்று முன்னமே நாம் கண்டோமாதலால், அந்த வகையில்தான் தொல்காப்பியரும் இச் செய்யுள் இலக்கணத்தைச் செய்திருக்க வேண்டும் எனக் கொள்ளல்வேண்டும். அவ்வாறு கொள்ளின், எழுத்து வழக்கற்ற அந்தத் தொலை நெடுங்காலம் தொட்டு, தாம் வாழ்ந்த காலம் வரையில் அமைந்த செய்யுள் இலக்கணங்களையெல்லாம் ஒருங்கே தொகுத்துத் தொல்காப்பியர் தம் வரம்பைக்கோலினர் என்று கொள்ளல் பொருந்தும். ஆனால், அந்த வரம்பைத் திட்டமாக்கி, அதைக் கடக்கலாகாது என்ற கட்டுப்பாட்டை அமைக்காது, புறநடையால் வருங்காலச் செய்யுள்களையெல்லாம் தன் எல்லையுள் புக இடந்தந்தமையாலேதான் தமிழ்ச் செய்யுள்—தமிழ்க் கவிதை,’ நலம்