பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

51


தொல்காப்பியர், இவ்வாறு பொருளால் பெயர்பெறும் பாடல் வகைகளையும் தம் செய்யுள் இயலில் இடம்பெற வைத்துள்ளார். எனவே பொருளாற் சிறக்கும் கவிதை வகை இங்கே சிறந்து விளக்கப் பெறுகின்றதன்றோ?

தொல்காப்பியர் தம் செய்யுள் இயல்லே கவிதை எவ்வாறு அமையவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டிச் செல்கின்றார். கவிதை என்பது ஓரளவு கவிஞன் கற்பனையின் ஊற்றுப் பெருக்கத்தில் தோன்றி வளர்வதானாலும், அது வாழ்வோடு பிணைந்த ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் தொல்காப்பியர். எனவேதான், அவர் செய்யுளியலில் பாட்டுக்களைப் பாகுபடுத்தும்போதும், இன்னின்னவற்றிற்கு இவ்விவ்வகையான பாடல்கள் அமையவேண்டும் என்று கூறும்போதும், அவற்றை மக்களின் வாழ்வோடு சார்த்தியே கூறுகின்றார். இச் செய்யுளியல், செய்யுள் எவ்வெவ்வாறு அமையவேண்டும் என்பதைக் காட்ட வந்ததாகலின், இன்ன பொருளுக்கு இன்ன வகையில், செய்யுள் அமைத்தல் சிறந்ததாகும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. புறநிலை வாழ்த்து,வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை, அங்கதம் ஆகிய பலவற்றைத் தனித் தனி விதந்தோதுகின்றோர் ஆசிரியர். அவற்றுள் ஒன்றைப்பற்றி அவர் காட்டும் நெறியறிந்து மேலே செல்லலாம்.

வாழ்தல் அனைவருக்கும் இயைந்த ஒன்று. மற்றவரை வாழ்க’ என்று வாழ்த்துவது இயற்கையுங்கூட. உலகம் வாழ வழி வகுக்கும் நல்லவர்கள் அனைவரையும் வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து நல்ல கவிதையாக அமையின், சிறப்பாய் விளங்கும். பாட்டாகிய அக் கவிதை எவ்வாறு அமைய வேண்டும் என எண்ணிப் பார்ப்பவர் ஒரு சிலர். சிலர் வாழ்த்தின், சொல்வழித் தவறு நேருமோ என அஞ்சி வாழ்த்துப் பாடல் பாடவும் மறுப்பர். அவர் கூற்றின் உண்மையை நாம் ஆராய முற்படவேண்டா. நமக்கு அது தேவையும் அன்று. ஆனால், அவ்வாழ்த்து எவ்வாறு அமையவேண்டும் என்று தொல்காப்பியனார். கூறுவதை மட்டும் ஈண்டு நோக்குதல் நலமாகும்.