பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கவிதையும் வாழ்க்கையும்



'வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிகனி பயக்கும்என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே.’ (418)


என்று தெளிவாக வாயுறை வாழ்த்து அமைய வேண்டிய வகையைக் கூறி விளக்குகின்றார் அவர் கொடுஞ்சொற்கள் இல்லாது, எதிர்காலம் சிறக்கும் என்று சொல்லி, செவ்விய உள்ளத்தால் வாழ்த்துவது அன்றோ வாயுறை வாழ்த்து! இவ்வாழ்த்தும் பிறவும் வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றில் அமைக்கப் பெறவேண்டும் என முந்திய சூத்திரத்தால் செய்யுள் வகையை விளக்கிக் கூறிவிட்டார். இவ்வாறே, வெறுஞ் செய்யுள் இலக்கணத்தை மட்டும் காணாது. அதனால் கூறப் பெறும் பொருளையும் உள்ளடக்கியே கவிதையின் சிறப்பைக் காட்டுகின்றார் ஆசிரியர் தொல்காப்பியர்.

வாழ்த்து மட்டுமன்றி, வசை பற்றிய பாடல்களையும் அங்கதம் என்று வகைப்படுத்துகின்றார் அவர். ஆனால், அது வாழ்வுக்கு வேண்டப்படாத ஒன்றாதலாலே, அதைப் பற்றி அதிகமாக விளங்கக் கூறாது, இன்னதன்மைத்து என இலக்கணம் மட்டும் காட்டி மேலே செல்கின்றார். ஆனால், பிற்காலத்தே இவற்றை வைத்துக்கொண்டு, ‘கவிதை பாடுவோம்’ என்று விருது கட்டிக்கொண்ட புலவர் சிலர், வசை பாட வல்லவர் என்று தம்மைக் கூறிக்கொண்டு, மற்றவரை மிருட்டியே வாழ்ந்து வந்துள்ளனர். வசை பாடக் காளமேகம் என்று ஒரு புலவரே அதெற்கெனப் புறப்பட்டு விட்டார். இவர்களுக்கு ஏற்பப் பாட்டியல் என்ற நூலும் உண்டாயிற்று. அதிலே எழுத்துக்களை நச்செழுத்தென்றும், அமுத எழுத்தென்றும் பிரித்து, இன்னின்ன எழுத்தை முதலாக வைத்துப் பாடினல் பாட்டுக்குடையவன் வாழ்வான் என்றும், இன்னின்ன எழுத்தை முதலாக வைத்துப் பாடினால் மாள்வான் என்றும் ஆசிரியர் கூறியுள்ளனர். வெண்பாப் பாட்டியலும், சிதம்பரப் பாட்டியலும் அவற்றில் முக்கியமானவை போலும்! தமிழ் நாட்டில் வழங்கும் பிரபந்த வகைகளைக் கூறிக்கொண்டே வருகின்ற இந்