பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

57


பெற்றுள்ளது. புறம் பற்றிய துறைகளை வகுத்து, அவற்றின் பெயர்களைப் படல வரிசைப்படுத்தி விளக்குகின்றது அந்நூல். ஒரு பாடலைக்கொண்டு அது பாடும் பொருள் இன்னது என்பதைக் கண்டு, அதற்கு ஏற்ப அப்பாடற்குப் பெயரிட்டிருக்கின்றனர் புலவர். அரசனது சிறப்பைப் பாடுவதும், அவன் வாளையும் குடையையும் போற்றுவதும், அவன் பிறந்தநாள் விழாவைப் போற்றுவதும், அவன் வெற்றியைப் பாடுவதும். அவன் கழிவை நினைத்து இரங்குவதும் ஒவ்வொரு வகையால் ஒவ்வொரு பெயரால் வழங்கப்படுகின்றன. அரசனைப் பற்றி மட்டுமின்றி, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அனைத்தையும் பற்றிய பல பாடல்களும் அவ்வாறே வழங்கப்படுகின்றன. வேய், புலனறி சிறப்பு, தழிஞ்சி, பூக்கோள் நிலை,குதிரை மறம், மண்ணு மங்கலம், நூழில் முதலியன அவ்வகையில் பொருள் பற்றிய பாடல்களின் துறைப் பெயர்களே. இவை போன்ற பாடல்கள் பிற மொழிகளிலும் உள்ளன என அறிகின்றோம் "Sonnets, , Elegy, Prelude’ போன்ற பலவகைபட்ட ஆங்கிலப் பாடல்களைப் பயின்றார் அறிவர். மறைந்ததை எண்ணி இரங்கும் பாடலும், வெற்றியைச் சிறப்பிக்கும் பாடலும் ஆங்கிலத்திலும் உண்டு. எனவே, இப்பகுப்புமுறை தமிழில் மட்டும் அமைந்த ஒன்றன்று. எனினும், இத்தமிழ்மொழியில் உள்ள அத்துணைப் பிரிவுகள் ஆங்கிலத்தில் இல்லை என்பது அறிஞர் கண்ட முடிவு.

‘புறப்பொருளை விளக்கும் பகுதி தொல்காப்பியத்தில் ‘புறத்திணையியல்’ என்னும் பகுதியாய் விளங்குகின்றது. அதில் பல்வேறு வகைப்பட்ட துறைகள் பேசப்படினும், புறப்பொருள் வொண்பா மாலையில் பேசப்படுவன போன்று அத்துணைப் பெயர்களால் அவை வழங்கப்படவில்லை, வெண்பா மாலை, காலத்தால் மிகப் பிந்திய நூல். எனவே, அத்துணை இடையிட்ட காலவேறுபாட்டில் அவை தனித்தனியாகப் பெயர் பெற்று, சமயத்திற்கு ஏற்ற வகையில் பாடுமாறு அமைந்தன என்று கொள்ளுதல் சாலப் , பொருத்தமாம். அவற்றுள் இரண்டொன்று கண்டு மேலே செல்லலாம்.க.வா. —4