பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கவிதையும் வாழ்க்கையும்


துறைக்கு ஒரு பாட்டு என அமைத்து, நானூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடிக் கோவையாகக் கோத்து உருவாக்கப் பட்டனவல்லவோ? எனவே, இப்படி அகத்திலும் புறத்திலும் பாட்டின் பொருள்நிலை கருதி, அவற்றின் பெயர்களும் பலவாகப் பெருகிக் கொண்டே சென்றுள்ளன.

தொல்காப்பியர் காலத்துக்குப்பின் நாட்டில் பல்வேறு காவியங்கள் எழுந்தன. அவற்றையெல்லாம் உள்ளடக்கி அவற்றின் பிரிவுகளையெல்லாம் வரிசைப்படுத்தித்தான் போலும், புறப்பொருள் வெண்பா மாலை. அகப்பொருள் விளக்கம், இறையனர் அகப்பொருள் போன்ற நூல்கள் எழுந்தன என்று எண்ணமுண்டு. ‘அவை இருக்கட்டும். அத் துறைப் பெயர்கள் அமைப்புக்கும் நம் கவிதையின் வகை நிலைக்கும் என்ன தொடர்பு?’ என்று சிலர் கேட்கக் கூடும்: எண்ணின், தொடர்பு நன்கு விளங்காமற் போகாது. அதையும் காண்போம்.

தமிழ்நாட்டு இலக்கியங்களில் மிகத் தொன்மை வாய்ந்தவை சங்க இலக்கியங்களே. அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற இருவகையுள்ளே அடங்குவன. அப் பாடல்களைப் பயில்வார் அவற்றுள் காட்டப்பெறும் பொருள்களை நன்கு உணர்வர். அவை அகமும் புறமும் அமைந்த பொருள்களைக் காட்டும் பாடல்களேயாம். ஒன்று அகப்பொருள்பற்றி விளக்கும்; அன்றிப் புறப்பொருள் நலம் காட்டும். உலகப் பொருள்கள் அனைத்துமே தமிழன் அளவின்படி இவ்விரண்டில் அடங்கித்தானே ஆகவேண்டும்? எனவேதான், எல்லாக் கவிதைகளும் இவ்விரு பொருள்களைப்பற்றியே எழுகின்றன என்ற முடிவு காட்டப்படுகிறது.

சங்க இலக்கியங்களுள் சிறப்பாகப் பேசப்பெறும் எட்டுத்தொகை நூல்கள், புலவர் பற்பலரால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டனவாகும். , காலத்தாலும், இடத்தாலும், பண்பாலும், வாழ்க்கை முறையாலும், பிறவற்றாலும் வேறுபட்ட பல நூறு புலவர்தம் பாடல்களே இத்தொகை