பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

63


பெறும். சித்திரங்களின் உள்ளே எழுத்துக்களையும் சொற்களையும் அமைத்து, அவற்றின் வழியே பாட்டை உருவாக்கினமையின், அவை சித்திரகவி எனப் பெயர் பெற்றன. போலும்! அவை நாகபந்தம், முரசபந்தம், சக்கரபந்தம் முதலிய. பல வகைப் பெயர்களைப் பெற்றுள்ளன. பாம்பின் வடிவில் அடைபடும் பாட்டு நாகபந்தம். முரசில் அடைபடும் பாட்டு முரசபந்தம். சக்கரத்தில் அடைபடும் பாட்டுச் சக்கரபந்தம். இவ்வாறு இன்னும் எத்தனையோ வகையில் சித்திர கவிகள், இடைக்காலத்தில் வளர்ந்துள்ளன. தொல்காப்பியர் காலத்திலோ, அதை ஒட்டிய சங்க காலங்களிலோ, இத்தகைய சித்திர கவிகள் இல்லை. அக் காலப் புலவர்கள் வெறுஞ் சொற்குள் அடங்கும் வெற்றுக் கோட்டைகளாகக் கவி புனையாது, பொருளாகிய உயிரைப் பெய்து உயிரோவியம் தீட்டினர்கள். எனவே, அவர்களது பொருள் நலத்தில் இத்தகைய சொற்களை வைத்தாளும் சித்திர கவிகள் இடம் பெறவில்லை. ஆனால், பிற்காலத்தில் சொல்லாடலே கவி என்னும் அளவுக்கு ஒரு கவிதைப் பண்பாடு நாட்டில் வளர்ந்து விட்டது. அக்காலத்தில் வந்தனவே இந்தச் சித்திரகவிகளும் இவற்றை ஒட்டிய பிற கவிதைகளும். ஆகையினாலேதான் இவைபற்றிய விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லையாயினும், பின்னல் வந்த தண்டி அலங்காரம், மாறன் அலங்காரம் போன்றவை, இவற்றிற்கும் இலக்கணம் வகுக்கத் தொடங்கின. பொருளற்றவை நிலைபெற மாட்டா என்பது, இன்றைய உலகில் அவை விளக்கம் பெறாதிருப்பதிலிருந்தே நன்கு புலப்படும். எனினும், தமிழ்க்கவிதை வகையில் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் கவிகளும் நிலைத்த இடம் பெற்று விட்டமையால், அவற்றைப்பற்றி ஓரளவாவது நாம், அறிய வேண்டும் என்ற கடமைவழியே நம் கருத்திருத்தி மேலே செல்வோம்.

சித்திர கவியைப்பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். இனி ஆசு, மதுர, வித்தார கவிகளைப் பற்றியும் அறிதல் அவசியம். ஆசுகவி யென்பான், பெரும்பாலும் வரகவி என-