பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

67


இல்லையென்று யாரால் சொல்ல முடியும்? கவிகள் அனைத்துமே மதுரம் பொருந்தியவையாகத்தான் இருக்க வேண்டும். எனினும், பிற கவிதைகளுக்கும். இம்மதுர கவிகளின் கவிதைகளுக்கும் என்னதான் வேறுபாடு? மற்றவர் பாடல்கள் அளவில் குறுகியோ விரிந்தோ எடுத்த பொருளை விளக்கிச் செல்லும் முகத்தான் அமைந்து, வேடிக்கையும் சிலேடையும் பிற அணிகளும் இடையிடை விரவியனவாக இருக்கும் போலும்! அவை காட்ட விரும்பிய பொருள்களையே கருத்துட் கொண்டு, கவிதையாகச் செல்லும். மதுர கவிகளோ, இனிமைப் பொருளை மட்டும் காட்டும் ஒன்றாக மட்டும் அமைந்து இருக்கலாமோ என எண்ண இடம் உண்டு. வேடிக்கையும் விநோதமும் பொருந்திய பல பாடல்களை இன்றும் நாம் காண்கின்றோம். பொருள் செறிவு ஒன்றுமின்றி, சொல்லழகும் செறிந்து நிற்காவிட்டாலும், சில பாடல்கள் கல்லாதார் உள்ளத்தையும் பிணிப்பதைக் காண்கின்றோம். படக் காட்சியில் வரும் எத்தனையோ பாடல்கள், இவையும் பாடலா? என்று அருவருக்கத் தக்க வகையில் அமைகின்றன. எனினும், அவற்றுள் ஒருசில, கேட்கும் மக்கள் அனைவர் உள்ளத்திலும் பதிந்து, அவர்களை எப்போதும் தம்மையே முணுமுணுக்கச் செய்துவிடுகின்றன. ‘டடடா டடடா’ என்ற சினிமாப் பாட்டும், ‘நாடகமே உலகம்’ என்ற இன்னிசைப் பாட்டும் இன்னும் எத்தனையோ தோன்றிய அவ்வக்காலங்களில் தமிழ் நாட்டு உதடுகளை வென்று, அவற்றின்மேல் ஆணை செலுத்திய திறனை அறியாதார் யார்? ஆனாலும், அவற்றைப் பாட்டுக்கள் என்றோ கவிதை என்றோ கற்றார் கொள்ளமாட்டார். இவ்வாறு பலருக்கு இனிமை பயப்பது போன்று அமையும் பாடல்களை மதுரகவி எனக் கொள்ளலாமா? கொள்ளலாம் என்பர் பலர் என்றாலும், இவ்வாறன பாடல்களைக் கவிதை வகையுள் சேர்த்து, நாற்பெருங் கவிகளுள் ஒரு வகையாகக் கொள்ளப் புலவர் உலகம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? இதன் நிலை அறிஞர் ஆராயவேண்டுவது ஒன்றேயாகும்.

நாம் மேலே கவிதை என்னும் பெயருக்கு ஏற்ற இலக்கணம் கண்ட வகையில் இவைகளும் ஒரு கவிதை இனத்தையே சாரும்,