பக்கம்:கவிதை உள்ளம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகே காட்சி

நீலவானில் நின்றொளிரும் நேர்மையழகே - உயர்
நித்தில ஒளியில் நிற்பாய் நல்ல அழகே
கோலமாய் விளங்குமொரு கோதில் அழகே - இந்தக்
குவலயம் நினதாகுமே குணவழகே.

நேர்மைநிறை உள்ளமதில் நின்றொளிருவாய் - மாற்று
நேரிழையார் இன்முகத்தில் நேர்ந்திடுவாய்
சீர்மைநிறை ஓவியமும் உன்பொருளாம் - அதன்
சிறப்பை விரித்திடுதல் செயலல்லவோ!

கடலின் ஒலியினிலே கார்நிறத்தே - மற்றும்
காணரும் இன்பமளி மலரினிலே
உடலிலே உயிரென ஒன்றிநின்றாய் - உனை
உன்னி வணங்கிடுவோம் அழகணங்கே!

கொடியில் விளங்கிடுவாய் நல்லழகே - அந்தக்
கொடியின் துளிரும்உன தழகல்லவோ
விடியும் பொழுதினுமே மாலையினும் - யாண்டும்
விளங்கும் அழகணங்கே வெற்றியடி!

கதிரவன் ஒளியிலும் கண்டிடுவேன் - உனைக்
கார்நிறை மழையிலும் கொண்டிடுவேன்
அதிரும் சிலம்பொலியும் நின்ஒலியே - அன்றி

ஆடவர் அருட்செயல் நின்செயலே.

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/119&oldid=1387828" இலிருந்து மீள்விக்கப்பட்டது