பக்கம்:கவிதை உள்ளம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


பால்நிறை நல்லமுதுன் சுவையே - பின்னும்
பால்ஒளிச் சந்திரனும் நின் உருவே
மேல்படும் காற்றின தின்செறிவே - உந்தன்
மேலாம் அழகதின் செறிவல்லவோ!

ஆற்றினில் தோன்றிடும் ஓடையுமே - அதில்
அழகுடன் ஆடிடும் மீனினமே
சேற்றில் விளையும் நல்ல செங்கழுநீர் - இன்னும்
செப்பும் பயிர்கள் யாவும் நின் செயலே.

இயற்கையில் நின்றிடும் எழில்விளக்கே - உனை
எண்ணா திருப்பின் உயிர்இயங் கிடுமோ
செயற்கை நிலைெெளல்லாம் உன்நினைப்பில் - வந்து
செகத்தில் திரிவதுவே ஆகுமடி.

அறத்தின் பயனாகவும் நின்றிடுவாய்-மற்று
அருளின் திருவுருவும் நீயே யன்றோ
திறத்தின் வலியவீரர் செய்கையெல்லாம் - நிந்தன்
செம்மை வழியதனால் செயமல்லவோ!

மானுடற் புள்ளியாக மயக்கிடுவாய் - காணும்
மரகதப் பச்சையாக மாறிடுவாய்
பேணும் அடியர்களுக் காண்டவனாய் - நின்று
பேதமகற்றி அருள் செய்திடுவாய்!

இன்சொல்லாய்த் தோன்றுவதும் நின்வடியே - இனி
இந்நிலத் தெப்பொருளும் நீயலவோ
உன்செயல் உலகத்தை ஓங்குவிக்கும் - இதை
உணர்ந்தவர் இறையருள் உற்றவரே!

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/120&oldid=1387796" இலிருந்து மீள்விக்கப்பட்டது