பக்கம்:கவிதை உள்ளம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகன்


எங்கிருந்தோ வங்தான் ஒருவன்-அவன்
எல்லார் வீட்டையும் விட்டு என்வீடு வந்தான்
பொங்கியே துள்ளிக் குதித்தான்-உயர்
பொற்புடன் எனைக்கண்டு போடுசோ றென்றான்

ஒன்றும் அறியாது நின்றேன்-அவன்
ஓகோ இதேது மயக்கமே என்றான்
துன்றும் உறவினன் நானே-உடன்
சோறு அளிப்பாய் துணையாய் இருப்பேன்

என்றவன் கூறினன் இப்பால்-நானும்
எண்ணாத தெல்லாமும் எண்ணிட நின்றேன்
நன்றிவன் கூறிய தென்னே?-நான்
நாடி விளையாடும் காலத்தில் வந்தான்

சுற்றி இருந்தவர் கண்டார்- அவர்
சொல்லாமலே செல்லச் சூழ்ச்சியும் செய்தார்
பற்றி இழுத்தான் சோறென்று-அதைப்
பார்த்தவர் கண்டு நகைத்துமே சென்றார்

ஏதடா இச்செயல் என்றேன்-அவன்
என்னைநீ அறியாயோ உன்துணை என்றான்
வாதுகள் செய்வது நன்றோ-நல்ல
மனமகிழ் உணவெனக் களித்திடு என்றான்

ஒன்றும் தெரியாது நின்றேன்-அட
உன் பெயர் உரைத்திடு ஓர்குவன் என்றேன்
நன்றென் பெயர் முருகன்தான்-நான்

நாடி மலைகளில் வாழ்பவன் என்றான்

159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/161&oldid=1387520" இலிருந்து மீள்விக்கப்பட்டது