பக்கம்:கவிதை உள்ளம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

ன் இளமைக் காலம் இயற்கையோடு இயைந்தது. பாலாற்றங் கரையில் பசுமை நிறைந்த சோலையில் என் பிஞ்சுமனம் பறந்தோடிய காலம் அது. என் உள்ளம் அந்த இயற்கை நலத்தோடு ஒன்றிய இளமைக் காலத்தில்—பத்தாம் வயதிலேயே என்னை அறியாமல் உள்ளத்தில் கவிதைப் பெருக்கெடுத்தது. அந்தக் காலத்திலேயே—நான் வாலாஜாபாத்து இந்து மத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நாளில்—திரு. வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள், பள்ளிக்குப் பார்வையாளர்கள் வரின் என்னை வரவேற்புக் கவிதைப் பாடச் சொல்வார்கள். எனவே கவிதை என்னை ஆடலிலே—இளமை விளையாடலிலே மணங் கொண்டது; மணம் பெற வைத்தது.

பின் காஞ்சிபுரத்தில் ஆண்டர்சன் பள்ளியில் தமிழாசிரியனாகப் பணியாற்றிய காலத்தில்—அரசி பயலில் பங்கு கொண்ட அந்தக் காலத்தில்— செங்கற்பட்டு மாவட்டக் கழகத்தில் உறுப்பினனாக இருந்து தொண்டாற்றிய காலத்தில், ‘தமிழ்க்கலை’ என்ற திங்கள் இதழைத் தொடங்கி நடத்தினேன். திங்கள் தோறும், தலையங்கமும் கவிதை ஒன்றும் எழுதி வெளியிட்டேன். எனவே அக்காலத்தில் என் கவிதைகள் பல அச்சேறி வெளிவந்தன. அதற்கு முன்பே ‘பாரதி வாழ்வு’ போன்ற சிறுபிரபந்த நூல்களும் வேறு சில தனிப் பாடல்களும் சித்தாந்தம், சிவநேசன், பித்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. ஆயினும் அவற்றுள் ஒன்றிரண்டு தவிர்த்துப் பெரும்பாலான எங்குள்ளன என அறியேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/5&oldid=1387513" இலிருந்து மீள்விக்கப்பட்டது