பக்கம்:கவிதை உள்ளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


செப்பிடு அகப்பொருட் செறிவினை உடையாய்!
        தெய்விகக் காதலைத் தெரித்திடு முதல்வி!
ஒப்புனக் கொருவரு மில்லையீ துண்மை
        உத்தமியே பள்ளி எழுந்தரு ளாயே! 7

எக்குலத் தாரெனும் வேற்றுமை யின்றி
        எம்மதத் தாரினும் இரண்டென லின்றி
மிக்குடை ஒற்றுமை வழிதனைக் காட்டி
        மேன்மைத் தமிழர்கள் எனஉணர்த் திட்டாய்!
ஒக்கலும் நண்பரும் உளமுவந் துன்னை
        உச்சரிப்பார் கண்ட வுடனருந் தமிழே!
பக்குவ உணவெலாம் நீயெனப் புகழும்
        பைந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே! 8

களவெனும் மணமதிற் காணரு மின்பம்
        காட்டியே காதலை மீட்டிடுந் தேவி!
உளமுவந் தாரெலாம் ஒண்ணமிழ் தாக
        ஓங்குவர் நின்புகழ் ஓங்குக என்றும்!
அளவிலா மக்களும் ஆகும் இயற்கை
        அனைத்தும் நின் நிலைத்திறம் ஆதவ தறிந்தே
உளமடை திறந்துனை ஓடிடக் கண்டார்
        உயிர்த்தமிழே பள்ளி எழுந்தரு ளாயோ! 9

உன்னரு மக்கள் யாம் உன்னருள் மொழியால்
        உணர்த்துவம் அயர்ச்சியை ஒழித்திடல் வேண்டும்!
இன்னருங் கலை அணிந் தினியநன் முகத்தோ
        டெங்கள் முன் எழுந்தருள் எமதருட் டமிழே!
மன்னவர் மற்றவர் மாற்ற மொன்றின்றி
        மண்ணின் மேல் சம்மென வந்துனைப் பணிந்தோம்!
உன்னருள் விழியுடன் கண்டெமைப் புரக்க
        ஓங்குமென் தமிழன்னை உடனெழுந் தருளே. 10



60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/62&oldid=1388655" இலிருந்து மீள்விக்கப்பட்டது