பக்கம்:கவிதை உள்ளம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழி இசையே நீடுழி

இன்பம் தரும் இனிய இசையே—உனை
என்றும் மறவேன் அருங்கனியே—மனம்
துன்றும் அரிய கலைப்பயிரே—சொல்லச்
சுகமே அருளவைக்கும் நிலையே. (இன்பம்)

பண்ணின் இசையில் நின்னான் பரமன்—உயர்
பண்ணில் மகிழ்ந்துறைந்தான் அவனும்—நிலை
எண்ணில் மனமுருகி எவரும்—நின்று
இன்ப நலம் பெறுவர் கண்டாய்! (இன்பம்)

உலகில் நிறைந்த ஒருகலையே—உனை
உன்னா திருப்பின் பெரும் அலையே—மனம்
நிலையில் இருக்க அருள் தருவே—அன்றி
நேர்மை நலம் பெருகும் நிலையே. (இன்பம்)

எங்கும் நிறைந்த உயர் இசையே—உனை
எண்ணா திருக்கமனம் வருமோ—நிலை
பொங்கும் புலவர்மன மகலா—உயர்
புண்ணியச் செல்வமே வாழி. (இன்பம்)

துன்பம் நிறைந்தமன மதற்கும்—அன்றித்
துயரே நிறைந்த பெரும் அலைக்கும்—உடன்
இன்பம் அளித்து மனமாற்றி—நிறை

இனிமை பயக்குமொரு இசையே. (இன்பம்)

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/65&oldid=1388663" இலிருந்து மீள்விக்கப்பட்டது