பக்கம்:கவிதை உள்ளம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வித்தகச் சோழரும் சேரர் வியன்நிலைப் பாண்டியர் யாரும்
ஒத்து வளர்த்த தமிழே ஓங்கி வளர்ந்திடக் கூவாய்!

இயலிசை நாடக மென்றே இந்நிலம் போற்றும் தமிழை
மயலிடை மாழ்கிடா திங்கே மகிழ்ந்திடு நற்குயிலே நீ
துயிலிலா வாறு நிமிர்ந்து தூய்மை உளமே சிறந்து
அயலுளார் யாவரும் போற்ற ஆனந்தமாய் நின்று கூவாய்!

உலகுக் கொருகுறள் தந்த உத்தமன் வள்ளுவன் பேரைப்
பலரும் பயின்றனர் நீயும் பண்புடை நற்குயிலே காண்!
உலவ உரைத்திடு வாயேல் உயர்ந்த நலமெலாம் பெற்று
அலகில் அரும்புகழ் உற்று ஆனந்த மாகவே ஆவாய்!

செஞ்சிலம் பிசைத்திடு சேரன் சீர்புகழ் கூவிடு நீவாய்
விஞ்சிய புகழுடன் வாழ வேண்டிடின் விளம்புவன் குயிலோ!
கொஞ்சு தமிழிசை பாடிக் குளிர்ந்த மரநிழல் ஓடி
எஞ்சலிலா வழி தேடி இயைந்து வளர்ந்திடு வாயோ!

இன்னிசைக் கீத மியம்பும் எழிற்குயிலே இசைப்பாய் நீ
பொன்னின் துளிர்த் தொளிர்கின்ற பூம்புகழ்ச் செந்தமிழ்த் தேவை
எண்ணி எண்ணி நிதம்போற்றி எய்தலாம் பேரின்ப வாழ்வே!
உன்னிடு வாய் இதை நீயும் ஓதிடுவாய் தமிழ் என்றே!

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/68&oldid=1387606" இலிருந்து மீள்விக்கப்பட்டது