பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + 2 கவிதை பயிற்றும் முறை பிறருடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலேயே மகிழ்ச்சியடை கின்றவர், தம்முடைய சிறுமையைத் தான் காட்டிக் கொள் கின்றார் என்பது வெளிப்படை. அவரால் பொருள்களின் உயிர் நாடியை-இதயத்தை-ஒருநாளும் நன்கு உணரமுடியாது. அவர் பெருங்கவிஞர்களின் நட்பை எப்பொழுதும் பெறவே இயலாது. கவிஞர்களும் தம்மைபோல மனிதர்களே என்று காட்டும் ஒன்றில் மட்டிலுமே அவருடைய அக்கறை செல்லும் . சுருங்கக் கூறினால் தம்மையே அவர்களிடம் காண்கின்றனர்; தம் குறைகளையே அவர்களிடமும் காண்கின்றனர். இத்தகைய திறனாய்வாளர் வடையை உண்ணும் செயலை விட்டு அதன் துளையை எண்ணிக் கொண்டே நேரங்கழிக்கும் பேர்வழிகளைப் போன்றவர்கள். உண்மையான திறனாய்வாளர் கவிதைகளைத் துய்க்கும் ஆற்றல் பெற்றவர்; அவர் கவிதைகளில் உண்மையும் அழகையுமே காணமுனைவார்; தாம் காணும் ஒரு சில குறைகளை ஒரு பக்கம் ஒதுக்கிதள்ளிவிட்டுக் கவிதைகளைப் பாடிய கவிஞர்களின் அருகில் வாழ விரும்புவார்; அவர்களுடைய பெருமையில் தம்மையும் வைத்துக் காண விழைவார். இவ்வாறு ஆராயும் திறன் எளிதில் கைவரப்பெறுவது அன்று. இதற்குப் பயிற்சியும் வேண்டும்; ஒழுங் கும், கட்டுப்பாடும் வேண்டும். பலகாலம் ஒழுங்காய்க் கட்டுப் பட்டுப் பயின்ற இலக்கியப் பயிற்சியுடையவர்க்கே இத்திறன் வாய்க்கப்பெறும். குறைகளைக் காண்பது மிகவும் எளிது; கம்பன், இளங்கோ போன்ற மேதையரிடமும் குறைகளைக் கண்டுவிட லாம். ஆனால், அவர்களைப்போல் உன்னத நிலையிலிருந்து கொண்டு மானிட வாழ்க்கையைப் பரந்து காணும் திறனையாவர் பெறமுடியும்? கவிதைகளில் பொருள்களின் தன்மையைவிட அக் கவிதைகளைப் பாடிய கவிஞர்களின் உணர்ச்சிகளே சிறப்பிடம் பெறுகின்றன; அவர்கள் காணும் அழகும் வாழ்க்கை உண்மை களுமே நம் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளுகின்றன. கவிஞர்கள் அவ்வப்போதைய மனநிலைக்கேற்ப, அவ்வக் காலத்துச் சூழ்நிலைக்கேற்பப் பல்வேறுபட்ட உணர்ச்சிகளை யுடையவராயிருப்பர். இத்தகைய வேறுப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்டு தாம்மேற்கொண்ட பொருள்களின் அழகைக் கற்பனை செய்து பாடுவதனால்தான், அக்கவிதையில் புதுப்புதுக் காட்சி களைக் காணமுடிகின்றது; நாமும் அக்காட்சியில் அழகில் ஈடு பட்டு அநுபவிக்கின்றோம். இடையிடையே காணும் வாழ்க்கை யைப்பற்றிய உண்மைகள் நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகின் றன. பழைய பாஞ்சாலி சபதத்தையே பாரதி புதுமெருகு கொடுத் துப் பாடியுள்ளமை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.