பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

குறிப்பிடப்பட்டு வந்தார். அருந்தொடர்களைக் கூறியதனால் பெயர் பெற்ற புலவர்கள் பலர் நம் தமிழ் நூல்களில் காணப்படுகின்றனர். ஒருவர் மூங்கில் மரத்தின் முனை, நீர் நிலையில் படிந்திருப்பது மீனைப் பிடிக்க எறியப்பட்ட காரணத்தால், மீனெறிதூண்டிலார் எனப்பட்டார். இரும்பிடர்த்தலையார் புலமை மிக்கவர் என்பது இவரால் பாடப்பட்ட பாடல் புறநானூறு என்னும் தொகை நூலில் இடம் பெற்று இருப்பதால் நன்கு அறியலாம். இவரால் பாடப்பெற்ற பெருமை பெற்றவன் பாண்டியன் கருங்கை யொள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவன். இப் பாண்டியன் வீரமும் கொடையும் பெற்றிருந்த காரணத்தால் இப்புலவர் பெருமான் இவனைப் பாடினர் போலும்! புலவர் சோழர் மரபினர் ஆயினும், பாண்டியன் ஒருவனைப் புகழ்ந்து பாடியது இவரது பரந்த நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

புலவர் இப்பாண்டியனை விளிக்கையில், இப்பாண்டியர் குலம் ஈகையில் முன்னணியில் நின்ற இயல்புடையது என்பதைத் “தவறா ஈகைக் கவுரியர் மருக!” என்று கூறி யதிலிருந்து அறியலாம். ‘மருக’ என்பது மரபில் வந்தோனே என்பதைக் குறிக்கும் மொழி யாகும். இவ்வாறு அவனை விளித்துப் “பூமியே பிறழ்ந்தாலும் நீ சொன்ன சொல்லைத் தவறாது நடப்பாயாக” என்பதை, “நிலம் பெய-