பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


“பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று கூறிவிட்டு இறப்பாரோ ? இறவார் அன்றோ? இங்கனம் நீதியை நிலை நாட்டக் கருதித் தம் உயிரை நீத்த மேம்பாட்டினை ஆசிரியர் இளங்கோ அடிகளாரும் நன்முறையில் அறிவித்திருப்பது இவ்வரசர் பிரானது அருமையினை அறிவிக்கின்றது. அவ்வாறு அறிவிக்கும் சிலப்பதிகார அடிகள்

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

என்பன. இத்தகைய மன்னர் பிரானார் நீதியில்தான் கண்ணும் கருத்துமாய் இருந்தார் என்று கூறுதற்கு இல்லை. கல்வியிலும் தம் கருத்தை முற்றிலும் செலுத்தியவர் என்பதை இவர் புறநானூற்றில் கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும் பாடல் ஒன்றால் நன்கு அறிகிறோம். தமக்கு மிகுந்த புலமைப் பெருக்கு இருந்தால் அன்றி இவர் இத்தகைய கருத்துடைச் செய்யுளை யாத்திருக்க இயலாது.

இவர் கல்வியின் மாண்பினைக் கூறும் பாட்டில், கல்வி கற்பதாயின், ஆசிரியர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும், அவர்க்குத் துன்பம் வந்த போதெல்லாம் உதவி புரிந்தும் கற்றல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். நாட்டிற்கு அடிப்படையாவார் கற்றவர்.