பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஆதலின், அங்ஙனம் கற்றவர் பலரை ஆக்க வேண்டியவர் கணக்காயர், ஆதலின் கணக்காயர்கட்கு எந்த விதமான துன்பமும் நேரா வண்ணம் தம் காலத்தையும் கருத்தையும், குடிமக்களின் கல்வி அறிவு மிகுதற்குச் செல வழிக்கும் பொருட்டுப் பெரும் பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசர் திருவாயால் கூறியிருப்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். மாணவர்களும் ஆசிரியரிடத்து அன்பும் மரியாதையும் காட்டி ஆசிரியரை வழிபட்டுக் கற்றால் அன்றிக் கல்வி செழிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பால் ஒருவன் சிறப்படைய இயலாது. கற்றிருந்தால் மட்டும் சிறப்படையலாம் என்றும் கூறியிருக்கும் கருத்தை ஒவ்வொருவரும் உளம் கொள்ளுதல் வேண்டும். கற்றவனையே பெற்ற தாயும் விரும்புவள் என்பதையும் அப்பாடலில் அறிவித்துள்ளார். நாடும் அரசும் அறிவுடையோர் சொல்படி கேட்கும் என்று அறிவித்திருப்பதையும் நாம் நன்கு சிந்தித்தல் வேண்டும். வயதுக்கும் பெருமையில்லை. வயதால் சிறியவனாயினும் அறிவால் பெரியவனாயின், அவனே யாவரினும் சிறந்தவன் என்பது இவர் கருத்து. இல்லையானால்,

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”

என்று கூறுவாரா? கூறார் அன்றோ ?