பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

என்னே, பெண்ணின் மீதுள்ள பரிவு, கனிவு, கதை சிற்பியின் காலில் விழவைக்கும் அளவு கவியின் உள்ளத்தைக் கனிய வைக்கிறது. “கதியற்ற பெண்களின் ஊமை உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, பெண் மனதின் ஆழ்ந்த ரகசியங்களை உணர்ந்து, பெண்மையைப் போற்றி, விழிப்புணர்வைத் தந்த மதிப்பிற்குரிய எம் நண்பனே உனக்கு வணக்கம்!" என சரத் சந்திரரின் பிறந்த நாள் விழாவில் மகளிரின் பாராட்டுதல்கள் மனதை நெகிழச் செய்கிறது. கவியும், கதைச் சிற்பியுமான இலக்கிய கடவுளர்கள் பெண்களின் மீது காட்டிய இரக்கமும், பாசமும் இதயத்திலிருந்து எழுந்ததால்தான் இன்றும், என்றும் அது உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கதைச் சிற்பி இவ்வாறு சொல்கிறார் - இளம் எழுத்தாளர்களுக்கு....

'மனித வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் மலிந்து கிடக்கின்றன. அவை எழுத்தாளர்களான உங்களின் கண்களில் படவில்லையா? நமது அடிமைத்தனம், அறியாமை, வறுமை இவைகளால் மனித இனம் படும் பாடும் - இன்னல்களும் உங்கள் இதயத்தைத் தொடவில்லையா? இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, ஆபாசமான, பாலுணர்வு பற்றி மட்டுமே எழுதுவது கோழைத்தனமானதல்லவா' என்கிறார்.

இளம் எழுத்தாளர்களே இதயத்தைத் திறவுங்கள் ஏழைகளுக்காக! அவர்களின் விழிப்புணர்வுக்காக' எங்கு அறியாமை ஒழிக்கப்படுகிறதோ அங்கு ஏற்றம் அழைப்பில்லாமல் வரும் - தேடிக் கொண்டு.

வெ.இரா.நளினி