பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

காதலொடு காணுங்கண் ணசைவு போதும்;
கனியிதழில் தவழவிடும் முறுவல் போதும்;
போதுமலர்ந் திடுங்காறும் புலன டக்கிப்
பொறுத்திருப்பீர் எனப்புரியும் போதம் போதும்;
கோதிவிடும் கூந்தல்நுனி பற்றி மோந்து
கொண்டுமனங் களிக்கின்ற குறிப்பே போதும்;
வேதனைகள் தீர்ந்திதயம் விரும்பு மின்ப
விண்வெளியில் நான்பறப்பேன் விரைந்து நாளும்!

தென்றலிலே நிலவுகலந் திடுத லொப்போ!
திருக்குறளில் வாழ்வுகலந் திடுத லொப்போ!
மன்றலிலே முல்லைகலந் திடுத லொப்போ!
மதுரவிசை தமிழில்கலந் திடுத லொப்போ!
அன்றிலிரண் டாணும்பெண் ணாய மர்ந்தே
அகமகிழ்வில் அவனிமறந்திடுத லொப்போ!
முன்றிலிலே நாங்களமர்ந் திருக்கு போது
முழுவதுமொப் பெனினுமவை யொப்பா காதே!

அத்தைமகள் தான்தாரா! முறைப்பெண்! நாளும்
அதிகாலை வந்தெனது பணிகள் செய்வாள்;
சொத்துசுக மிகுந்ததெலா மத்தான் முன்பே
சுறுசுறுப்பாய்ச் சூதாடித் தொலைத்து விட்டார்!
மெத்தமனம் நொந்த அத்தை செத்துப் போமுன்,
மெதுவாயென் கைப்பற்றிக் கொண்டு, “கண்ணா!
புத்தமுத மிவளுனக்குச் சொந்தம்! வைத்துப்
போற்றிக் கொள்!” எனப்புகன்று விட்டுப் போனாள்!

36