பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. தாகூர் பார்வையில்
காந்தியடிகள்

ந்திய நாடு வெள்ளையர் ஆட்சியிலே இருந்து முழு சுதந்திரம் பெற வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்! இது உலகறிந்த உண்மை. அதற்காக மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். வழக்கறிஞர்கள் முதல் மாணவர்கள் வரையில் எல்லோரையும் நாட்டு விடுதலைப் போரில் கலந்து கொள்ளுமாறு அவர் அறை கூவல் விடுத்தார்

கவிஞர் தாகூர் காந்தியடிகளது செயலைக் கண்டு மனம் வருந்தினார். மாணவர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தாகூர் விரும்பவில்லை. கல்லூரிகளை விட்டு அவர்கள் வெளியேறிப் போராட்டத்தில் கலந்து கொண்டால், அவர்களது கல்வி பாழாகிவிடும் என்பதால் அந்தத் திட்டத்தை ரவீந்திரர் வெறுத்தார்.

மாணவர் உலகம் தாகூர் கருத்தை வெறுத்தது; பழித்தது. அவரது எண்ணத்தின் உண்மையை உணர மறுத்தது. காந்தியடிகளின் போர் முறையைத் தாகூர் வெறுத்தாரே ஒழிய, காந்தியடிகளை அவர் தனிப்பட்ட முறையில் வெறுத்தவரல்லர்