பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



ஐரோப்பிய நாடுகளின் நாகரிகத்தை எப்போதும் அவர் புறக்கணித்தது இல்லை. ஆனால், அதற்காக, அந்த நாடுகளின் நாகரிங்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதும் தீமை அதுபோலவே அடியோடு அவற்றை ஒதுக்குவதும் நமது வாழ்க்கைக்கு நட்டமே என்று நம்பினார். ஒவ்வொரு நாட்டின் நன்மை-தீமைகளையும் ஆராய்ந்து பார்த்து ஏற்க வேண்டியதை ஏற்றும், தள்ளவேண்டியவற்றைத் தள்ளுவதும் நல்லது என்றார்.

விசுவ பாரதி கலைக் கழகத்தில், எக்காரணத்தைக் கொண்டும் சாதி, சமயப் பிளவு புகுந்து விடாதபடி தாகூர் பாதுகாத்தார். எல்லாச் சமயத்தாரும், எல்லா இனத்தாரும் ‘மனிதர்’ என்ற பொதுத் தன்மையில் விளங்கி வாழ வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். அதே போல அங்கே இருந்த உணவு விடுதிகளிலே எவ்வகையான வேறுபாடுகளும் புகுந்து பிளவு படுத்தாதபடி எச்சரிக்கையோடு செயல்பட்டார். வழிபாடுபோன்றவற்றிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், முழு உரிமைகளை அங்கே நிலை நிறுத்தினார் ரவீந்திரர்!

ஜப்பான் பயணத்தில் ஏற்பட்ட கசப்பு

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1916-17ஆம் ஆண்டின்போது ஜப்பான்நாட்டிற்குப் பயணம் சென்றார். அவருக்கு அந்தநாடு சிறப்பான வரவேற்புகளை வழங்கியது. பல கூட்டங்களிலே அவர் சொற்பொழிவாற்றினார். ஜப்பான் தேசத்துக் கவிஞர்களோடும், கலைஞர்களோடும் கலந்துரையாடி நட்புக் கொண்டார்.

ஜப்பானியர்களின் மண்ணாசையையும், பகையுணர்ச்சியையும் அவர் வெறுத்தார்! அதே நேரத்தில் அவர்களது