பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பேறுகள் அனைத்தும், செல்வம் என்று சான்றோரால் அழைக்கப்படுவதும் உண்டு, அவற்றுட் கல்வியும் ஒன்றாகும். எல்லாச் செல்வங்களும் வேண்டப்படுவனவேனும் அவற்றுட் கல்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வம் என்று கருதப் படுகிறது. கல்வியைப்பற்றிக் கூறவந்த வள்ளுவர் 'கேடில் விழுச் செல்வம் என்று குறிப்பிடுகிறார். மணி, பொன் முதலிய ஏனைய பொருட் செல்வங்கள் செல்வமல்ல என்றுங் கூறுகிறார். கல்வி, கேடில்லாத செல்வம், சீரிய செல்வம் எனக் கூறியதன் காரணத்தை நீ நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும். மணி, பொன் முதலான செல்வங்கள் தாயத்தாரால் பங்கிட்டுக் கொள்ளப்படும்; கள்வராற் கவரப்படும்; அரசு சீறின் அரசால் பறித்துக் கொள்ளப்படும்; வெள்ளத்தால் அழிக்கப்படும்; வெந்தணலால் எரிக்கப்படும். கல்விச் செல்வம், பங்கிட்டுக் கொள்ளவோ, கவர்ந்து கொள்ளவோ, பறித்துக் கொள்ளவோ இயலாதது; அழிக்கவோ எரிக்கவோ முடியாதது. பொருட் செல்வங் கொடுக்கக் கொடுக்கக் குறையுந்தன்மையது; கல்விச் செல்வங் கொடுக்கக் கொடுக்க வளருந் தன்மையது. பொருட் செல்வம் பிறரிடம் மாறிச்செல்லும் இயல்பினது; கல்விச் செல்வம் மாறாது நிற்கும் இயல்பினது. அதனால் அக்கல்விச் செல்வம், கேடில் செல்வம் என்றும் விழுச்செல்வம் என்றுஞ் சிறப்பித்துக் கூறப்படுகிறது. அழிவில்லாத அச் செல்வத்தை-சீரிய அச்செல்வத்தை அரிதின் முயன்று தேடிப் பெறவேண்டியது உன் கடமை