பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிச்சுவையெனப்படும். செவிச்சுவையறிந்தவர்களே மேலானவர். ஆயினும் வாய்ச்சுவை யறிந்த மாந்தரே மிகப் பலராகக் காணப்படுகின்றனர். செவிச்சுவையுணர்ந்தோர் சிலராகக் காட்சியளிக்கின்றனர். வாய்ச்சுவை எல்லாராலும் எளிதாக அறியப்படுவது; செவிச்சுவை சிலராலேயே அரிதாக உணரப்பெறுவது. சான்றோர், செவிச்சுவையுணர்ந்தாரையே விரும்புவர்; வாய்ச்சுவை மட்டும் அறிந்தாரை வெறுப்பர். செவிச்சுவையை யுணராது, வாய்ச்சுவை யொன்றே அறிந்த மக்கள் வாழ்ந்தாலென்ன ? மாண்டாலென்ன ? என வள்ளுவப் பெருந்தகையே வைதாரென்றால், அதனின் மேலாக ஒன்றுங் கூறவேண்டுவதில்லை. தக்க சூழ்நிலையில்லாத காரணத்தாலோ, தன்னால் இயலாத காரணத்தாலோ ஒருவன் கல்வியைக் கற்காமல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால், கேள்விச் செல்வத்தை மட்டும் இழந்து விடுதல் கூடாது. கற்காவிடினுங் குற்றமில்லை; கேள்வியால் அவன் தெளிவு பெறலாம். செவியுணவாகிய கேள்வியறிவினை யுடையார், எவ்வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டார். துன்பம் வரினும் அத் துன்பத்தினின்றும் நீங்கிவிடுவர். நீங்கு தற்குரிய வழி வகைகளை யறிந்து, அத்துன்பத்திற் சிக்காது, தப்பித்துக் கொள்வர். வறுமையினால் துன்பம் வரலாம்; அறியாமை யால் துன்பம் வரலாம். அத்துன்பத்தால் மனந் தளர்ச்சி யடையும். கேள்வியறிவினையுடையவர், அத் தளர்ச்சிக்கு இடங்கொடார். அத்தளர்ச்சியில் வழுக்கி விழாமலிருக்க, ஊன்றுகோல் போலத் துணை செய்யும் அக்கேள்வியறிவு.