பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நா நலம்- நாடு) அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. மாணவர் மன்றத் தாரால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதற் பரிசில் பெற்றதாக எழுதியிருந்தாய். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். என் மகிழ்ச்சியைவிட, உன் தாயின் மகிழ்ச்சிதான் பெரிதாக இருந்தது. பிறர் தன் மகனைச் சான்றோன் என்று புகழ்ந்து சொல்லுதலைக் கேட்ட தாய், அவனைப் பெற்றெடுத்த பொழுது மகிழ்வதைவிடப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளு வாள் என்பது பொய்யாகுமா ? உன் தாய் மட்டும் அப்பொது விதிக்கு விலக்காகி நிற்க முடியுமா? நீ பெற்ற பரிசிலுக்காக அவள் மகிழ்ந்துவிடவில்லை. பலருங் கலந்து கொண்ட போட்டியில் நீ முதல்வனாக வந்ததையும், பரிசில் கொடுக்கும்பொழுது தலைவர் உன்னைப் பாராட்டிப் பேசியதையும் உன் தாய், கற்பனை செய்து பார்த்து, நினைந்து நினைந்து மகிழ்கின்றார். அக்காட்சியைக் கண்டு, நான் மனத்துக்குள்ளேயே மகிழ்ந்து கொள்ளுகிறேன்.