பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச் செயல்கள், இன்றியமையாத சிறப்பினையுடையனவாக இருப்பினும் அவற்றைச் செய்ய ஒருப்படார். "பழியெனின், உலகுடன் பெறினுங் கொள்ளலர்” என்பது புறநானூறு புகட்டும் அறிவுரையாகும்) "வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான மழுங்க வரின்” என்பது நாலடியார் நவிலும் நல்லுரையாகும். தம் உயர்ந்த நிலையை விட்டு, அதனின்றுந் தாழ்ந்த மக்களைச் சமுதாயம் அறவே வெறுத் தொதுக்கிவிடும். தலையினின்றும் வீழ்ந்த முடியை எவ்வாறு வெறுத்துத் தள்ளுவோமோ அவ்வாறே அம் மக்களையும் புறக்கணித்து விடுவோம். தலையில் இருக்கும்வரை அம் முடியை எவ்வெவ் வாறு பேணிக் காத்து வருகிறோம். அதைப் போலவே தந் நிலையில் நிற்பாரைப் பேணிக் காக்கின்றோம். நிலை யினின்றும் இழிந்துவிடின், அவரைத் தலையின் இழிந்த முடியாகவே கருதி விடுகின்றோம். ஆதலின், தந் நிலையிற் றாழாமலும், தங்குடிக்குத் தாழ்வு வாராமலும் எவரொருவர் விளங்குகின்றாரோ அவரே நன்கு மதிக்கப்பெறும் தன்மை யைப் பெறுவார் என்பதை நீ நன்கு புரிந்து கொண்டிருப் பாய் என்று கருதுகின்றேன். ஒருவர் கல்வி, செல்வம், குடிப்பிறப்பு முதலியவற்றால் மலையைப் போன்ற உயர்ச்சி பெற்றிருப்பினும் அவர் குன்றிமணியளவு இழிசெயலைச் செய்தாராயினும் மிகத் தாழ்ந்த நிலையினையே அடைவார்.