பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - கவியின் கனவு அறிவுக் களஞ்சியமாக இருப்பினும் நாடகக் கலைச்சுவையைச் சிறிதும் குன்றச் செய்யாமல் மேன்மேலும் பெருகச் செய்யும் சிறப்பு இங்குக் குறிக்கத் தக்கதாகும். - “நான் இருக்கப் பயம் ஏன்?”, “நானே கடவுளின் தூதன்' என்று சொல்லி, மனிதரை மந்தையாக ஆட்டி வைக்கும் சர்வாதி காரிகள் தொலைய வேண்டும். தம் அழகையும் அறிவையும் கொண்டு உலகை ஏய்த்துத் துன்புறுத்தும் ஊர்வசிகளும் தொலைய வேண்டும் நல்லவர்களின் நல்லுணர்வும் ஆற்றலும் அவர்களைத் தொலைப்பதற்குப் பயன்பட வேண்டும். அதன் பிறகுதான் உண்மைகள் - கலைகள் செழித்து விளங்கி நாடெங்கும் அமைதி நிலவ முடியும். இதுவே இந் நாடகத்தின் கருத்து. இந்தக் குறிக்கோளின் பொருட்டு நல்லவர் பலர் துன்புற்றுத் தியாகம் செய்ய வேண்டியது கடமையாகிறது. இந்தத் தியாக உணர்ச்சியே நாடகத்தின் உயிராக உள்ளது. கலையின் வாயிலாக ஒரு நாட்டின் எழுச்சிக்கும் ஆக்கத்திற்கும் தொண்டு செய்ய முடியும். நாடகம் ஆற்றல் மிகுந்த கலை; கண்ணின் வாயிலாகவும், செவியின் வாயிலாகவும் உள்ளத்தைத் தொட்டு எண்ணத்தைச் செயற்படுத்தும் ஆற்றல் வாய்ந்த கலை. இந்த நாடகத்தில் கவிஞர் தம் மாணவர்களுக்குக் கூறுவதாக அமைந்துள்ள கருத்து “அந் நாடகத்தை இன்று தான் முடிக்கப் போகிறேன். அது ஒன்றே போதும் நமது நாட்டு மக்களின் உறக்கத்தை மாற்ற" என்பது முற்றிலும் உண்மை. "கவியின் கனவு" என்னும் இந்நாடகம் இவ்வகையில் ஆற்றிய தொண்டு பெரிது. இன்னும் ஆற்ற இருக்கும் தொண்டும் போற்றத் தக்கதாகும். மு. வரதராசன்