பக்கம்:கவி பாடலாம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பிலக்கணம் 109

காலத்தில் வாழ்ந்த அமுதசாகரர் என்பவர். அவர் ஜைனர். முதலில் யாப்பருங்கலம் என்னும் நூலை இயற்றிப் பின்பே யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார். இந்த இரண்டுக்கும் குணசாகரர் என்பவர் விரிவான உரைகளை இயற்றியுள்ளார். யாப்பருங்கலம் நூற்பா என்னும் சூத்திர வடிவில் அமைந்தது, யாப்பருங்கலக் காரிகை கட்டளைக் கலித்துறைகளால் அமைந்தது. ‘காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே’ என்பது ஒரு பழமொழி. தமிழ் நாட்டில் கவி பாடுபவர்கள் காரிகையை ஆழ்ந்து கற்றார்கள் என்பதை இந்தப் பழமொழி புலப்படுத்துகிறது.

யாப்பிலக்கணத்தில் இரண்டு வகையான முறைகள் இருந்தன என்று தெரிகிறது. அசைகளை நேர்-நிரைநேர்பு-நிரைபு என்று பிரித்தும், அடிக்கு எழுத்தெண்ணிக் கணக்குப் பண்ணிக் கட்டளையடி என்று வகுத்துப் பெயரிட்டும், தளைக்கு இலக்கணம் கூறாமல் விட்டும், பாவினம் என்ற பிரிவைக் கொள்ளாமலும் இலக்கணம் வகுத்தவர் ஒரு சாரார். தொல்காப்பியத்தில் இந்த முறையைக் காணலாம். அந்நூலின் உரையில் தளை வகுத்தல் தொல்காப்பியருக்கும் அவரைப் பின் பற்றி நூல் இயற்றிய ஆசிரியர்களுக்கும் உடம்பாடு அன்று என்று பேராசிரியர் வற்புறுத்திக் கூறுவார். விருத்தம் போன்ற பாடல்களைச் கொச்சகம் என்ற வகையில் பழைய ஆசிரியர்கள் அடக்குவர் என்பதைச் சிலப்பதிகார உரையினால் அறியலாம். - -

ஆனால் இந்த முறை நீண்ட காலத்துக்கு முன்பே வழக்கு இழந்திருக்க வேண்டும். சீர்வகைப்படி அடிவரையறை செய்தலும், தளையை வகுத்தலும், பாவினங்களை ஏற்பதுமாகிய முறையை மயேச்சுவரர் என்பவர் விரிவாகத் தம் இலக்கணத்தில் உரைத்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/110&oldid=655698" இலிருந்து மீள்விக்கப்பட்டது