பக்கம்:கவி பாடலாம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவி பாடலாம்

வெண்பாக்களின் இறுதியில் வரும் ஒரசைச்சீர்களின் வாய்பாட்டைப் பார்த்தோம். வெண்பா இறுதிச் சீராக ஈரசைச்சீர்கள் யாவும் வருவதில்லை. மாச்சீர் மட்டுமே வரும், தேமா, புளிமா என்னும் இரண்டும் வரும். ஆனால் அவை இரண்டும் குற்றியலுகரத்தில் முடிவனவாக இருக்க வேண்டும்; அதனால்தான் தேமா, புளிமா என்ற வாய்பாடுகள் இருந்தாலும், தனியே குற்றியலுகரத்தில் முடியும் காசு, பிறப்பு என்ற வேறு வாய்பாடுகளை இலக்கணம் கூறுகிறது. முற்றுகரமும் சிறுபான்மை வரும். உகரம் அல்லாததை ஈறாக உடைய சொல் ஈரசைச் சீராக வெண்பா ஈற்றில் வராது.

‘இருள்சேரிருவினையுஞ் சேரா விறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”

இந்தக் குறளின் ஈற்றுச் சீர் மாட்டு என்பது; இது தேமா என்னும் வாய்பாடுடைய ஈரசைச்சீர்தான்; ஆனாலும் உகர இறுதியோடு வந்திருக்கிறதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் இது காசு என்னும் வாய்பாட்டைப் பெறும். இப்படியே,

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு.”

என்னும் குறளில் உள்ள ஈற்றுச் சீர் யுலகு என்பது. அது புளிமா என்னும் வாய்பாட்டையுடைய ஈரசைச் சீரே ஆனாலும், உகர இறுதியை உடைமையால் பிறப்பு என்ற வாய்பாட்டை உடையதாயிற்று. காசு, பிறப்பு என்ற வாய், பாடுகளை ஈற்றுச் சீருக்கு மட்டும் கொள்ள வேண்டு மேயன்றி, இடையில் வரும் உகர இறுதி மாச்சீருக்குக் கொள்ளக் கூடாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/79&oldid=655917" இலிருந்து மீள்விக்கப்பட்டது