பக்கம்:கவி பாடலாம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - கவி பாடலாம்

எதுகை வேறுபாட்டை விகற்பம் என்று குறிப்பது மரபு. ஒரே எதுகையாக அமைந்தால் அது ஒரு விகற்பம் என்றும், ஒவ்வோரடியும் வெவ்வேறு வகையில் இருந்தால் இரு விகற்பம் என்றும் கூறுவர்.

‘அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு” என்ற குறளில் இரண்டடியும் ஒரே எதுகையாக வந்தன. அகர-பகவன் என்ற முதற் சீர்கள் ஒரெதுகையாக நிற்பதைக் காண்க. இது ஒரு விகற்பக் குறள் வெண்பா.

‘உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க்கச்சாணி யன்னா ருடைத்து.’

இந்தப் பாட்டின் இரண்டடியிலும் ஒரே எதுகை அமையவில்லை. இரண்டும் வேறு வேறாக உள்ளன. இது இருவிகற்பக் குறள் வெண்பா.

திருக்குறளில் இந்த இருவகைப் பாடல்களும் வருவதைக் காணலாம். குறள் வெண்பாவினால் அமைந்த நூல்களில் சிறந்ததாதலின் வேறு பெயர் அமையாமல் திருக்குறள் என்ற பெயரே, திருவள்ளுவர் இயற்றிய நூலுக்கு அமைந்தது. ஒளவையார் பாடிய ஒளவை குறள் என்ற நூலும், திருவருட் பயன் என்ற நூலும், வேறு சில நூல்களும் முழுவதும் குறட்பாக்களால் அமைந்தவையே. பொருள்செறிவு நிரம்பியதாக இருந்தால்தான் குறளுக்கு அழகு. இரண்டடி வெண்பாவாகக் கணக்குப் பார்த்து எழுதி விட்டால், இலக்கணப்படி அது குறளாக இருக்கலாம்; ஆனாலும் சிறந்த குறள் என்று சொல்ல இயலாது. எல்லா வகையாலும் சிறப்புடைய திருக்குறளைப் போலக் குறட்பாவில் நூல் அமைவது மிகவும் அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/83&oldid=655922" இலிருந்து மீள்விக்கப்பட்டது