பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வே. இரா.மாதவன் இணைப்பேராசிரியர்

ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

தணிகைவேள் பாரதியாரின் தாள் சுவடிகள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் தோன்றி எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருந்த முதுபெரும் தமிழறிஞர் தி.வெ. தணிகைவேள் பாரதியார் ஆவார். இவர் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் உரைநடைப் பகுதியையும் தாமே தம் கைப்படத் தாள்களில் எழுதி வைத்துள்ளார். அவற்றுள் பல இன்று கிடைக்கவில்லை. இப்பொழுது கிடைத்துள்ள சில காகிதச் சுவடிகளை ஆராயும்முகமாக இக்கட்டுரை அமைகிறது.

வாழ்வும் வாக்கும்

தணிகைவேள் பாரதியாரின் முன்னோர்கள் தஞ்சையைச் சார்ந்தவர்கள். இசைத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள். இவர்கள் பின்னாளில் செங்கை மாவட்டத்தைச் சார்ந்த திருப்போரூரில் குடியேறி வாழ்ந்தனர். வேளாளர் குலத்தைச் சார்ந்த இவருடைய தந்தையார் பெயர் வெங்கடாசலம். தாய் தெய்வயானை அம்மாள் ஆவார். இவர்களுக்கு ஒரே மகனாகத் தோன்றிய இவர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். கோவை சுப்பிரமணிய சாஸ்திரியிடம் மாணவராயிருந்து தென்மொழி வடமொழி பயின்றார். ஆசிரியரின் முழு அன்பைப் பெற்ற இவர். முருகப் பெருமானை உபாசனா மூர்த்தியாகக் கொண்டவர். சிவதீக்கை பெற்றவர். இவர் சைவராகத் திகழ்ந்தவராயினும் வைணவத்தைப் போற்றியவர். வைணவ சித்தாந்தத்தையும் வைணவ பாடியத்தையும் நன்கறிந்தவர். தேவார இசையொப்பத் திவ்வியப்பிரபந்தத்தையும் பாடும் திறத்தவர். சைவ வைணவ வேறுபாடில்லாத நெறியாளர். இயற்றமிழைச் சொற்பெருக்காற்றியவர். இசைத்தமிழால் இசைத்தவர். நாடகத்தமிழாலும் நிகழ்ச்சிகளைச் செய்தவர்.

திருக்கழுக்குன்றத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்த இவர். அருகிலுள்ள விளாகம் என்னும் கிராமத்தில் நாடகத் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார். திருமங்கையாழ்வார் சரித்திரத்தை இசை நாடகமாகப் படைத்துள்ளார். மேலும். பண்டரிநாதர் இசைப் பாடல்களைப் பலருக்கும் பயிற்றுவித்துள்ளார். இன்றும் அப்பகுதி மக்கள் இதனைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

தமிழ் சமஸ்கிருதம். தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராகத் காகிதச்சுவடி ஆய்வுகள்

351