பக்கம்:காகித உறவு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

காகித உறவு


தொட்டு அம்மா கும்பிட்டதுடன், ‘திமிர் பிடிச்ச கழுத பேசுறத தப்பா நினைச்சிக்காதப்பா பால் குடுக்கிற மாட்ட பல்லப் பிடிக்கிற ஜென்மம் இவா’ என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னை அடித்தாள். எனக்கு அவள்மேல் அனுதாபந்தான் ஏற்பட்டது.

போதாத வேளை பப்பிக்கு ஜூரம் வந்துவிட்டது. சீஸன் கோளாறுதான். ஆனால் அண்ணியோ, எந்த வேளையில இந்த முண்ட நீ பெத்த பொண்ணுக்கு டான்ஸ் எதுக்குன்னு கேட்டாளோ என் பொண்ணு உடம்பெல்லம் ஆடுது. இந்த நிமிஷத்துல இருந்து இவளுக இங்க இருக்கப்படாது. ஒண்ணு அவளுக போகனும். இல்லன்னா நான் போகணும் என்றாள்.

இரண்டு மூன்று நாட்களில் நீ மூன்று டிக்கெட்டுகளை வாங்கி, மெளனமாக எங்களிடம் நீட்டினாய்.

கிராமத்திற்கு வந்த நாங்கள் மனமிரங்கி லெட்டர் போட மாட்டாயா என்று ஏங்கினோம். போஸ்ட் மேனிடம் உன் கடிதம் வருகிறதா என்று உனக்காக அவரிடம் பேசி, இறுதியில் அவருக்காகவே பேசத் துவங்கினேன். முப்பது வயது பிரம்மசாரி அவர் என்னைப்போல் எஸ்.எஸ்.எல்.சி. வரசித்தி விநாயகர் ஏமாற்றவில்லை. எப்படியோ எங்கள் உள்ளங்கள் ஒன்றிப் போய்விட்டன. அவர் நல்லவர். ஏனென்றால் பேனாவைப் பிடிக்காமல், உத்தியோகம் பார்ப்பவர். நம்பிக்கையானவர். ஏனென்றால் அதிகம் படிக்காதவர், இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திருமணம் தோரணமலை முருகன் கோவிலில் நடக்கப்போகிறது.

எப்படியோ, நீ கல்யாணத்துக்கு வந்தால், தாரை வார்த்துக் கொடுக்க வேறு ஆள்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பணம் இல்லை யென்றாலும், எப்படியாவது வருவதற்கு டிக்கெட்டு வாங்கிவிடு. போகும்போது அவர் டிக்கெட் வாங்கிக் கொடுப்பார்.

அன்புள்ள ஒன்றுவிட்ட தங்கை,
- தமயந்தி

கடிதத்தைப் பாதி படிக்கும் போதே பல்லைக் கடித்த மாடசாமி, முழுவதும் படித்ததும் அதிர்ந்து போனான். தமயந்தி மீது கோபம் வந்தது.

மாலையில் வீட்டுக்கு வந்ததும், மனைவியிடம் கடிதத்தைக் கொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/12&oldid=1383405" இலிருந்து மீள்விக்கப்பட்டது