பக்கம்:காகித உறவு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

13



காளிமுத்து. அவருடைய பல கார்களில் ஒரு கார் இவனிடமே எப்போதும் இருக்கும். இந்த அளவுக்கு, மா.கா. அதிகாரியிடம், தா.ச. அதிகாரியாகப் பணி புரிந்தவன். சொந்தத்தில் தொழில் செய்ய நினைத்து, கொஞ்ச காலத்திற்கு முன்புதான், இந்தக் காய்ச்சும் தொழிலில் இறங்கினான். சப்ளை அதிகாரியாக இருந்தபோது, தெரிந்து கொண்ட தொழில் நுட்ப விவரங்களை வைத்து, இந்தக் குடிசைத் தொழிலைத் துவக்கி போது, பல கார்களையும் பல அரசியல் தலைவர்களையும், பல அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த மாவட்டக் காய்ச்சும் அதிகாரி, அவனைச் சொந்தத் தொழில் வேண்டாம் என்று கெஞ்சினார். அதற்கு அவன் மசியாததால், அடியாட்களை வைத்து மிஞ்சிப் பார்த்தார். 'மாமூல்' ஆட்களை வைத்து மடக்கப் பார்த்தார். ஆனால் எதற்கும் காளிமுத்து கலங்கவில்லை.

மாவட்ட காய்ச்சும் அதிகாரியும், புரொடெக்ஷன் மானேஜர், சப்ளை அதிகாரிகள் முதலிய முக்கியப் புள்ளிகளும், அவனைப் புள்ளி வைக்க முடியாது எனத் தெரிந்து கொண்டு, சமாதான - சாராய சகவாழ்வுக் கொள்கையை, நேசக் கரத்தோடு நீட்டினார்கள். நீட்டிய கரத்தைப் பிடித்துக் கொண்ட காளிமுத்து, அவர்களிடமிருந்து "ஏரியா எல்லையை' வரையறுத்துக் கொண்டதுடன், ஆக்கிரமிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தையும், பரஸ்பர ரகசியப் பாதுகாப்பு உடன்பாட்டையும் செய்து கொண்டான்.

இப்படிப்பட்ட காளிமுத்துவை, அடியாளுக்கு அடியாளாக, அடியார்க்கும் அடியானாக விளங்கும் இதோ இந்த காளிமுத்துவை - ஒரு பொடிப்பயல் மிரட்டுகிறான் என்றால், அதுவும் "கிக் கொடுக்கும் இவனையே கிக் பண்ணப் பார்க்கிறான் என்றால்...

அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி கொஞ்சம் வசதியான வாலிபன். கல்லூரியில் முழுதும் கால் வைத்துவிட்டு, மழை இல்லாத சமயத்தில்கூட, அங்கே ஒதுங்கிய திருப்தியில் அதற்கு அத்தாட்சியாக, ஒரு சர்ட்டிஃபிகேட்டையும் வாங்கிக் கொண்டு, சமீபத்தில் ஊருக்குள் நிரந்தரமாக இருக்கிறான். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் பல கோப்பைகளை வாங்கியிருக்கிறான். வாங்கட்டும்; அதுக்காக, அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் மதுவிலக்குப் பொதுக் கூட்டம் ஒன்றில், பல தாலுக்கா அதிகாரிகளும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கலந்து கொண்ட, பலர் குடித்துப் புரண்ட அந்தக் கூட்டத்தில், காளிமுத்துவை வாங்கு வாங்குன்னு வாங்க வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/15&oldid=1383394" இலிருந்து மீள்விக்கப்பட்டது