பக்கம்:காகித உறவு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வளரும் வாசகர் அணி
ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம்

ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்ந்தவர். அவரின் சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது 'காகித உறவு'. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக் காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றியதால் புலப்பாட்டு நெறி வாய்க்கப் பெற்றவர். எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். அவருடைய அனுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுத்தன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது. அறிவு ஜீவிகள் என்று சொல்லக் கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பான்மையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது. வானொலியிலும், தொலைக் காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருந்ததால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும் புதிதல்ல. காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார் கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார்.


இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் அலுவலகங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/5&oldid=1064897" இலிருந்து மீள்விக்கப்பட்டது