பக்கம்:காகித உறவு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சனிக்கிழமை


நிற்கிறே. மோகன் கோஷ்டி, அவரு வந்தால் கல்லெறிவோமுன்னு சொல்றாங்க. 'இளமையில் கல்' என்கிறதை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க...'

'ஸார். சுத்தி வளைச்சுப் பேச வேண்டாம். வெள்ளி விழாத் தலைவர் வெண்தாமரைதான் வரணும்.'

இந்தா பாருப்பா. நீ அரசியல் மேடையில் பேசுறது எனக்குத் தெரியும். இப்போ, ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள், உன்னைச் சுற்றிவர்றதும் தெரியும். ஒன்றை மட்டும் நினைச்சுக்கோ. நீ மாணவனாய் இருக்கிற வரைக்கும்தான் இந்தப் பயல்கள் உன்கிட்ட வருவாங்க, உன் மூலம் மாணவர்களை, தங்கள் அரசியல் சுயநலத்துக்குப் பயன்படுத்தப் பார்க்கிறாங்க. நீ எப்போ கல்லூரியில் இருந்து வெளியேறுகிறாயோ அப்பவே ஒன்னை வள்ளுவர் சொல்ற மாதிரி, தலையிலிருந்து கழிந்த முடிமாதிரி நினைப்பாங்க. இன்னும் ஒண்ணு. நீ புத்திசாலிப்பையன்; தனியாய் இருந்தால் நல்ல பையன். வாழ்க்கை கல்லூரி இல்ல, நீ சந்திக்கப் போற சகாக்கள் மாணவர்கள் மாதிரி, வெள்ளையுள்ளமாய்ப் பழக மாட்டாங்க. ஆபீஸர், கல்லூரி முதல்வர் மாதிரி இருக்க மாட்டார். லைப் இஸ் நாட் லைக் காலேஜ் மேட்ஸ். பாஸ் வில் நாட் பி லைக் யுவர் பிரின்ஸ்பால். இதைப் புரிஞ்சிக்கிட்டு, இப்பவே அரசியலில் கலக்காமல் படிக்கணுமுன்னா படி. அப்புறம் உன் இஷ்டம். நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்."

கோபாலனுக்குப் புரியவில்லை. முதல்வரின் அறிவுரையை மீறி, அவன் தன் அபிமானத் தலைவர் வெண்தாமரையைக் கல்லூரிக்குக் கொண்டு வந்தான். அந்தத் தலைவரை பேமானியாகக் கருதிய, இன்னொரு தலைவரின் பைக்குள் கிடந்த மோகன் கோஷ்டி கல்லெறிந்தது. அப்புறம் போலீஸ் வந்தது. லத்தி வந்தது. கல்லூரிக்கு கால வரம்பில்லாமல் விடுமுறை வந்தது. பத்திரிகைகளில் அதன் பெயர் வந்தது. சனிக்கிழமை விடுமுறை வேண்டுமென்று கேட்க முடியாத அளவிற்குக் கல்லூரி மூடிக் கிடந்தது.

அப்புறம்...

பரீட்சை வந்தது. அதற்குப் பலர் வந்தாலும், ரிசல்ட் தெரிவித்த பத்திரிகைகளில் சிலரே வந்தார்கள். கோபால் மெஜாரிட்டியின் பக்கம் நிற்கும் ஜனநாயகவாதி. ஆகையால் அவன் பலரில் ஒருவனானான். பள்ளிக்கூடத்தில் முதலில் வந்த அவன் -பியூசியில் முதல் வகுப்பில் தேறிய அவன் சட்டப்படிப்பு படித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/56&oldid=1383495" இலிருந்து மீள்விக்கப்பட்டது