பக்கம்:காகித உறவு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சனிக்கிழமை


'ஸார் நாளைக்கு செகண்ட் சேட்டர் டே, இரண்டாவது சனிக்கிழமை சார்.'

'எனக்கு செகண்ட் சேட்டர் டேக்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறாயா? இந்தா பாருய்யா, நீ அரசாங்க ஊழியன். இருபத்து நான்கு மணி நேர ஊழியன். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், புளியமரத்தில் ஏறித்தான். ஆகணும். நாளைக்கு வர முடியுமா முடியாதா? ரெண்டுல ஒண்ணைச் சொல்லு...'

'வரேன் சார். ஆனா நாளைக்குள்ள முடிக்க முடியாது சார்."

'முடியாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையும் வா. முடியுமா முடியாதா?

'முடியும் சார். ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும்...'

ஒங்களுக்கெல்லாம் வேலை கொடுத்ததே தப்புய்யா. நீ எல்லாம் இங்க வந்து என் பிரானனை, ஏன்யா வாங்குறே? சொல்லுய்யா, வர முடியுமா? இல்ல வரவழைக்கணுமா?

'வரேன் சார்...'

'போய்த் தொலை...'

கோபால், தாசில்தார் அறையை விட்டுத் தொலைந்தான்." தொலைந்து போன தன்னைத் தேடுவதுபோல், தன்னையே ஒரு தடவை மேலும் கீழுமாய்ப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான். வெளியே அவனது சீனியர் சகாக்கள், பைல்களை எழுதிக் கொண்டும், அதே சமயம் ஒருவர் மற்றவர்களிடம் பேசிக் கொண்டும் இருந்தார்கள். இது சகஜம் என்பது போல், அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். ஒருவன் கூட ஒருத்திகூட, அவனை அனுதாபத்தோடு விசாரிப்பது இருக்கட்டும், அப்படிப்பட்ட பாவனையில் பார்க்கக்கூட இல்லை. |

'சனிக்கிழமை' புகழ் கோபால், கல்லூரித் தேர்தலில் 'வாக்குறுதி, வழங்கிய கோபால், படித்த வாழ்க்கையை இந்தப் பாழும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தான்; கல்லூரி முதல்வர் அப்போதுதான் அவனுடன் பேசுவது போல் தோன்றியது.

வாழ்க்கை கல்லூரி இல்லே. சகாக்கள் மாணவர்கள் அல்ல. ஆபீசர் பிரின்ஸிபால் ஆகமாட்டார். புரியதா?

கோபால், புரிந்து கொண்டான். பிராயச்சித்தம் செய்ய முடியாத காலவெளி கடந்து, புரிந்து கொண்டான்.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/58&oldid=1383518" இலிருந்து மீள்விக்கப்பட்டது