பக்கம்:காகித உறவு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பிறக்காத நாட்கள்



வைத்துக்கொண்டு தீண்டப்படாதவன்போல் ஏதோ ஒரு தார்மீகக் கோபத்துடன் நின்று கொண்டிருந்த முனுசாமியின் அருகில் வந்து இரண்டு லட்டுகளில் ஒன்றை நீட்டினாள். முனுசாமி அதை வாங்கி, குமார் நின்ற திசையை நோக்கி வீசியடித்த போது, காத்தாயி ஒன்றும் புரியாமல் விழித்து விட்டுப் பிறகு அதட்டினாள்.

'ஒனக்குப் பைத்தியமாடா'

'அவன் மட்டும் நான் கொடுத்த நிலக்கடலை மிட்டாய வீசலாமோ? அந்த லட்டையும் வீசணும்'

'புரியும்படி சொல்டா'

நானு ஆசையோட குமார்கிட்ட, மிட்டாய் குடுத்தேன். நீயே சொல்லும்மா எல்லாரும் எதையோ கொடுத்தாங்கன்னு நானும் குடுத்தா.. அவன். இங்லீசுல்ல திட்டிக்கிட்டு வீசுறான். அல்லாரும் என்னப்பார்த்து சிரிக்காங்கோ... அந்த லட்ட வீசும்மா காத்தாயி புரிந்து கொண்டாள். மகனிள் ஆணைக்குக் கட்டுப்பட்டவள்போல் எஞ்சியிருந்த எச்சிப் பலகாரங்களை காக்கை, குருவி தின்னட்டும் என்பது போல், பங்களாவின் காம்பவுண்ட் சுவரில் வைத்துவிட்டு மகனின் தோளின்மேல் கைபோட்டுக் கொண்டே குடிசையைப் பார்த்து நடந்தாள். அழப்போவதுபோல் இருந்த முனுசாமியின் கன்னத்தை வருடிக் கொண்டே,

'கவலைப்படாதேப்பா. கண்ணு. ஒனக்கு அம்மா பிறந்த நாள் வைக்கிறேன் என்றாள்.

"நிஜமாவா'

"நிஜமாவே!

'நான் எப்பம்மா பிறந்தேன்?'

'மாசி மாதம் மூனாந்தேதி'

'மாசின்னா இங்கிலீஸுக்கு என்ன மாதம்மா?'

'ஏண்டா இல்லாத பொல்லாததைக் கேக்குற...'

'அடுத்த புதன்ல உன்னோட பிறந்த நாளு.'

'கேக் வெட்டணும்மா'

'வெட்டலாம்'

'புதுச் சொக்கா'

'கண்டிப்பா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/64&oldid=1383307" இலிருந்து மீள்விக்கப்பட்டது