பக்கம்:காகித உறவு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.

இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.

மூன்றாவது காலமான 'சம்பளத்திற்கு' வந்தான். எந்தச் சம்பளம்? அடிப்படைச் சம்பளமான ரூபாய் ஐந்நூறா, இல்லை அலவன்ஸோடு சேர்த்த தொகையா? போகட்டும், வாங்கும் சம்பளமா? அல்லது வாங்க வேண்டிய சம்பளமா? சிறிது குழம்பி, எப்படியோ அந்த இடத்தையும் நிரப்பினான்.

'சென்ற தடவை என்ன காரணத்திற்காகப் பணம் எடுக்கப்பட்டது?' என்ற காலத்திற்கு முன்னால் வந்து, சிறிது நொண்டினான். என்ன காரணம்?

ஞாபகத்துக்கு வந்துவிட்டது. அவனால் மறக்க முடியாத காரணம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் அவன் தந்தை உயிரோடு இருந்தபோது அவர் இறந்துவிட்ட ஈமச் சடங்கிற்காக, இரண்டாயிரம் ரூபாய் கேட்டு மனுப் போட்டான் அவன், அவன் எந்தச் சமயத்தில் எழுதினானோ தெரியவில்லை. சொல்லி வைத்து போல், அவன் தந்தை அடுத்த மாதம் அதே தேதியில், அவன் 'காரண காலத்தை'ப் பூர்த்தி செய்த அதே காலத்தில் காலமானார் என்றாலும் அய்யாவின் சாவுக்காக, வாங்கிய இரண்டாயிரத்தை, அவர் இறப்பதற்கு முன்னதாகவே, அருமை மகள் ஸ்டெல்லாவுக்கு ஐந்து பவுன் தங்கத்தில் சங்கிலி செய்து போட்டு விட்டான். அப்பன் இறந்தபோது அந்தச் சங்கிலியை, அவனால் மகள் கழுத்திலிருந்து இறக்கவும் முடியவில்லை. இறந்தபோது தந்தையின் ஈமச்சடங்கிற்கென்று சித்திக்குப் பணமும் கொடுக்கவில்லை.

'எவ்வளவு வேண்டும்?' என்ற இடத்திற்கு முன்னால் மூவாயிரம் ரூபாய் என்று எழுதிவிட்டு, கடைசி காலத்திற்கு வந்தான். உடனே உண்மையிலேயே திணறிப் போனான். அந்தக் 'காலம்', தன் மனுவுக்கு 'காலன்' போல் வந்திருப்பதை நினைத்து, அவனுக்குக் கொஞ்சம் கோபங்கூட வந்தது. என்ன காரணத்தை எழுதுவது?

அய்யாவை, இரண்டாவது தடவையாகச் சாகடிக்க முடியாது. அம்மாவை... அவள் இளைய தாயார் தானே... சாகடிச்சால் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/7&oldid=1384245" இலிருந்து மீள்விக்கப்பட்டது