பக்கம்:காகித உறவு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஒரு ஏழைப் பெண்ணின் வாள்



எல்லோரும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு காரைப் பார்த்து ஒடப் போனார்கள் சிறுமியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து முடித்ததும் சீரியஸாகப் பேசினாள் :

"இப்ப வராது. பொழுது சாஞ்ச பொறவுதான் வரும்."

போன உயிர் திரும்பியவர்களாய் அந்தக் கோஷ்டி மீண்டும் உட்கார்ந்தாலும் அனிச்சையாக மலைப் பகுதிகளையும் அருகே இருந்த ஒரு குகையையும் பார்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் நெருங்கி நெருங்கி இருந்து கொண்டார்கள்.

"ஏ பொண்ணு, ஒன் பேரு என்ன?”

  • செல்லக்கிளி"

"ஒனக்கு சமைக்கத் தெரியுமா?"

"வீட்ல நான்தான் சமைப்பேன்"

“ஒன்ன கவனிச்சுக்கிறோம். இந்த விறகுக்கும் பணம் கொடுத்துடுகிறோம். இதோ அரிசி இருக்கு, எல்லாம் இருக்கு. சமைச்சுக் கொடுக்கிறியா?"

செல்லக்கிளி அந்த யோசனையைப் பரிசீலனை செய்பவள் போல் தலைக்கு மேல் இருந்த விறகுக்கட்டுக்கு மேல் இரண்டு கைகளையும் கொண்டு போய்ப் பின்னிக் கொண்டு நின்றாள். அவள் வீட்டில் நாலு மணிக்குத்தான் சாப்பாடு; இப்படி நாலு மணிக்குச் சாப்பிடுவதால் பகல் சாப்பாட்டை முடித்தது மாதிரியும் ராத்திரி சாப்பாட்டை முடித்தது மாதிரியும் ஆகிவிடும். அம்மா பசியில துடிப்பா.. இப்ப போனாதான் நாலு மணிக்குச் சோறு திங்கலாம். ஏன், இவியதான் கவனிச்சிக்குறேனு சொல்றாவள. நாமளுஞ் சாப்பிடலாம், அம்மைக்கும் கொண்டு போவலாம். எதுல கொண்டுபோவ முடியும்? ஏன் முடியாது? நாலு ஆல இலய எடுத்து ஈர்க்கால் குத்திட்டா போச்சு. எனக்கும் எங்கம்மாவுக்கும் சாப்பாடு போட்டு விறகுக்கு ரெண்டு ருவாயும் சமையல் கூலி ரெண்டு ரூவாயுமா நாலு ரூவா தருவியளான்னு கேக்கலாமா? சீச்சி. அதிகமா ஆசைப்படப்படாது. சமைக்கதுக்குச் சாப்பாடு. விறவுக்கு மட்டும் ஒண்ணர ரூவா தந்தாப் போதும். கண்டிஷனா பேசிக்கலாமா? சீச்சி. பெரிய இடத்துல போயி கறார் பேசுறது தப்பு. தருவாவ தருவாவ போயும் போயும் சோறு போடுங்கன்னா பிச்சைக்காரி மாதிரி கேக்கது? ஏன் கேக்கப்படாது?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/72&oldid=1383325" இலிருந்து மீள்விக்கப்பட்டது