பக்கம்:காகித உறவு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



72

ஒரு ஏழைப் பெண்ணின் வாள்



"குமார். இது விளையாட்டுக்குச் சமயமா? அந்தப் பக்கமாப் பாரு."

‘'வேலைக்காரக்குட்டி அமுக்கியிருக்கும். அது முழியே சரியில்ல. தேடுகிறது மாதிரி பாசாங்கு பண்ணுது பாரு..."

'அய்யய்யோ... என் மோதிரம்... மோதிரம் கிடைக்காம நகரமாட்டேன்."

"அதுக்குள்ள புலி வந்துட்டா..?

“சீ... என்ன விளையாட்டு இது? நல்லா தேடுங்க..."

"அவாகிட்ட. இருக்கான்னு சோதனை போடலாம்."

அவர்கள் செல்லக்கிளியைக் கூப்பிட வேண்டிய அவசியமே எழவில்லை. அவளே, பாறை மேல கிடந்தது' என்று சொல்லிவிட்டு மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். குளிக்கும் போது மோதிரத்தைக் கழற்றி வைத்ததை நினைவுபடுத்திக் கொண்டே மோதிரக்காரி அந்தச் சிறுமியைச் சோதனைபோட யோசனை சொன்ன அவள் ஒன்றும் பேசாமல் மோதிரத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாள். -

பிக்னிக் கோஷ்டி சாப்பாட்டில் இறங்கியது. சிறுமி, பாத்திரத்தில் இருந்த சோற்றைப் பரிமாறப் போனபோது அவள் கைகளையும் கால்களையும் பார்த்து முகத்தைச் சுழித்த பெரியம்மா, "ஐயாகிட்டே கொடு. அவரு பரிமாறுவாரு" என்று சொல்லிவிட்டுச் செல்லக்கிளியின் பொறுப்பைக் கண்ணாடி ஐயாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாள்.

உருளைக்கிழங்கு பொரியலாகவும் முட்டைக்கோஸ் கூட்டாகவும் கையோடு கொண்டு வந்த சிப்ஸ் காரமாகவும் கத்தரிக்காய் - வாழைக்காய் முருங்கைக்காய் சாம்பாராகவும் தட்டுக்களில் பாய்ந்தன. போதாக்குறைக்குக் கண்ணைச் சிமிட்டும் 'ஆம்லெட்டு'கள்.

செல்லக்கிளிக்கு அப்போதே சாப்பிட வேண்டும் போலிருந்தது. அதே சமயம் கொஞ்சம் குறைவாகச் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதிகமாகக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்தாள். கை காலெல்லாம் வேர்வை, தலையில் அடுப்புக்கரி, இவ்வளவு அருமையான சாப்பாட்டைக் குளிக்காமல் சாப்பிட அவளுக்கு விருப்பமில்லை. அதோடு, அவர்கள் சாப்பிடுபோது அங்கே நிற்பது 'பெளசாகவும்' தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/74&oldid=1383330" இலிருந்து மீள்விக்கப்பட்டது