பக்கம்:காகித உறவு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஒரு ஏழைப் பெண்ணின் வாள்



"ஏ பொண்ணு. சீக்கிரமா பாத்திரத்தைக் கழுவு. புலி வந்துடப் போவுது'என்று பெரியவர் சொன்னதும், செல்லக்கிளி சுயநினைவுக்கு வந்தாள்.

அவள் தனக்குத்தானே சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டாள். பரவால்ல. சாப்புடாட்டா செத்தா போவோம்? ஒரு வகையில சாப்புடாமப் போவது நல்லதுதான். நிறைய துட்டுக் கொடுப்பாங்க... அம்மாவுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போவலாம். ஒண்ணும் குடி முழுவிப் போவல. ஒண்ணே ஒண்ணுதான். இப்டி தெரிஞ்சிருந்தா... தூர ஊத்துன கஞ்சித் தண்ணிய குடிச்சிருக்கலாம். பரவால்ல. காசு நிறையக் கிடைக்கும்.'

செல்லக்கிளி அவசர அவசரமாகப் பாத்திரங்களைக் கழுவினாள். இதற்குள் வாலிபப் பையன்களில் ஒருவன் காரை 'ரிவர்ஸ்"ஸில் கொண்டு வந்தான். பெரியவர் டிக்கியைத் திறந்தார். முதலை மாதிரி வாயைப் பிளந்து கொண்டிருந்த டிக்கிக்குள்ளும் கார் ஸீட்டுக்குக் கீழேயும் எல்லா சாமான்களும் ஏற்றப்பட்டன. பையன், டிரைவர் இருக்கையில் உட்கார்ந்தான். எல்லோரும் ஏறினார்கள் நாயுந்தான்.

செல்லக்கிளி கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். கண்ணாடிக்காரர் பைக்குள் கையை விட்டு ஒர் ஐந்து ரூபாய் நோட்டையும் ஒரு ரூபாய் நோட்டையும் எடுத்தார். சிறுமிக்குப் பயங்கரமான மகிழ்ச்சி.

பெரியவர் முகத்தைச் சுழித்துக்கொண்டே, அஞ்சு ரூபா நோட்டா இருக்கே. ரெண்டு ரூபாய் சேஞ்ஜ் இருக்கா?' என்று கேட்டார்.

எல்லோரும் 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை மைனஸ் மாதிரி ஆட்டியபோது கஞ்சியிலும் படு கஞ்சியான பெரியம்மா, "ஒரு ரூபாய் போதும். விறகுக்கு ஐம்பது பைசா வேலைக்கு ஐம்பது பைசா... கொஞ்சமாவது பொறுப்பிருந்தா... ரெண்டு ரூபாய் கொடுக் கணும்னு சொல்லுவீங்களா" என்றாள்.

“இது மெட்ராஸ் இல்ல டாடி... அங்கதான் விலைவாசி அதிகம். ஒசில விறகு பொறுக்குகிற ஊரு இது. இதுங்களுக்கு இருபத்தஞ்சு பைசாவே லட்சம் ரூபாய் மாதிரி' என்றாள் பொருளாதாரப் பட்டதாரியான குதிரைக் கொண்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/76&oldid=1383337" இலிருந்து மீள்விக்கப்பட்டது